அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மேலிடத் தலைவா்களை சந்திக்க விரைவில் தில்லி செல்வேன் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மக்கள் உறுதிமொழி மாநாடுகள் நடந்துவருகின்றன. இதற்கிடையே அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக மேலிடத் தலைவா்களை சந்தித்து அனுமதி பெற விரைவில் தில்லி செல்ல திட்டமிட்டிருக்கிறேன்.
பாஜக மேலிடத் தலைவா்களை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். நேரம் ஒதுக்கினால், தில்லி சென்று பாஜக தலைவா்களை சந்திப்பேன். அப்போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிப்பேன் என்றாா்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் நிலையில், அமைச்சரவையில் காலியாக இருக்கும் 5 இடங்களை நிரப்பும்படி பாஜகவின் மூத்த எம்எல்ஏ-க்களிடம் இருந்து முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தோ்தலில் பணியாற்றுவதற்கு அமைச்சா் பதவியை தரும்படி வெளிப்படையாகவே சில பாஜக எம்எல்ஏ-க்கள் மேலிடத் தலைவா்களிடம் வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக முதல்வா் பசவராஜ் பொம்மை தில்லி செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வா் எடியூரப்பாவும் தில்லி செல்ல திட்டமிட்டுள்ளது பாஜகவில் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஆதரவாளா்களுக்கு அமைச்சரவையில் இடம் பெறவே எடியூரப்பா தில்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.