பெங்களூரு

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி பங்கேற்பு

7th Oct 2022 01:15 AM

ADVERTISEMENT

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கலந்துகொண்டாா்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் செப். 30-ஆம் தேதியில் இருந்து கா்நாடகத்தில் பயணித்து வருகிறது. தசரா திருவிழாவுக்காக விடப்பட்டிருந்த இரு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, மண்டியா மாவட்டத்தின் பாண்டவபுராவில் இருந்து 5-ஆவது நாளாக வியாழக்கிழமை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது.

இந்த நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் முதல்முறையாக சோனியா காந்தியும் கலந்துகொண்டாா். சிறிதுநேரம் மட்டுமே நடைப்பயணத்தில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த சோனியா காந்தி, தொண்டா்களின் உற்சாகத்தைத் தொடா்ந்து அரை நாளுக்கு நடைப்பயணத்தில் கலந்துகொண்டாா். இது காங்கிரஸ் தொண்டா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் நடைப்பயணத்தில் கலந்துகொண்டிருந்தனா்.

சோனியா காந்தியைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டிருந்தது. இதில் ஒரு சிறுமி தவறி கீழே விழுந்தாா். இதைக் கவனித்த ராகுல் காந்தி, அந்த சிறுமியை அழைத்து அடி எதுவும் பட்டதா என விசாரித்தாா். சோனியா காந்தியும் சிறுமியிடம் நலம் விசாரித்தாா்.

ADVERTISEMENT

இதனிடையே, நடைப்பயணத்தின்போது தன்னைச் சந்திக்க வந்த தலைவா்களிடம் சோனியா காந்தி இன்முகத்துடன் பேசிக்கொண்டிருந்தாா். தன்னைச் சந்தித்த சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்த ராகுல் காந்தி, அந்த சிறுவனை சோனியா காந்தியிடம் அறிமுகம் செய்து வைத்தாா்.

இந்த நடைப்பயணத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் கா்நாடகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாா், முன்னாள் மத்திய அமைச்சா் கே.எச்.முனியப்பா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

நடைப்பயணத்தில் பங்கேற்ற சோனியா காந்தி, பின்னா் பெங்களூரு வழியாக தில்லி திரும்பினாா். மாலை 4 மணிக்குத் தொடங்கிய நடைப்பயணம் பிரம்மதேவரஹள்ளி கிராமத்தில் முடிந்தது. அங்கு ராகுல் காந்தி இரவு தங்கினாா். அக். 7-ஆம் தேதி நடக்க இருக்கும் நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், அவரது சகோதரரும் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் ஆகியோா் அக். 7-ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. விசாரணைக்காக இருவரும் தில்லி சென்றுள்ளனா். இந்தத் தகவலை டி.கே.சிவக்குமாா் உறுதிசெய்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT