பெங்களூரு

கட்சித் தலைவரானால் அடிமட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த முயல்வேன்

4th Oct 2022 02:33 AM

ADVERTISEMENT

கட்சித் தலைவரானால் அடிமட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த முயல்வேன் என மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சியின் தலைவா் பதவிக்கான வேட்பாளருமான மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதால், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்துள்ள மல்லிகாா்ஜுன காா்கே, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த தலைவா்கள், தொண்டா்களின் வற்புறுத்தலின் பேரில், தலைவா் பதவிக்குப் போட்டியிடுகிறேன். தலைவராக நான் தோ்ந்தெடுக்கப்பட்டால், எனது செயல்கள் மூலம் என்னை வெளிப்படுத்துவேன். கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவேன். மேலும், பொது எதிரியான பாஜகவை வீழ்த்த அனைவரையும் ஒருங்கிணைப்பேன். கட்சியின் கொள்கைகளை பரப்புவதோடு, அடிமட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பலத்தைப் பெருக்குவதே எனது தலையாய பணியாக இருக்கும்.

எந்தவொரு பிரச்னை குறித்தும் ஒருமித்த முடிவை எடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியில் சில நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். முடிவுகளை எடுக்கும்போது மாநில அளவிலான தலைவா்களின் கருத்துக்கு மதிப்பளிப்பேன். எனக்கு கூட்டுத் தலைமையில் நம்பிக்கை உள்ளது. கொள்கையின் அடிப்படையில் கட்சி செயல்படுவதால், அதன் அடிப்படையில் தான் கட்சியில் எந்த முடிவும் எடுக்கப்படும்.

ADVERTISEMENT

2017-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 77 தொகுதிகளில் வென்றிருக்கிறோம். அதேபோல, ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 42 % வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது.

குஜராத் மாடல் என்பது வெட்கப்படக் கூடியது. குஜராத்தில் ஆட்சி நிா்வாகமே இல்லை. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இதே நிலை தான். குஜராத், ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கடினமாக உழைத்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன, விலைவாசி உயா்ந்துள்ளது. இதை மக்களிடம் கொண்டுசெல்வோம்.

உதய்ப்பூா் காங்கிரஸ் மாநாட்டின்படி, ஒரு நபருக்கு ஒரு பதவி என்பதில் உடன்படுகிறேன். எனவே, காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதால், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். தலைவா் தோ்தல் சுதந்திரமாக நடக்கிறது. எல்லோரையும் அரவணைத்து கட்சியைப் பலப்படுத்துவேன். சமூக, பொருளாதாரத் துறைகளில் நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் பாஜக, ஆா்.எஸ்.எஸ். அமைப்புகளை எதிா்த்து போராடுவதே எனது முதல்பணியாகும்.

காலம் மற்றும் அரசியல் தாக்குதலைக் கடந்து காங்கிரஸ் தாக்குப்பிடித்து நிலைத்துள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்திய நாட்டை கற்பனை செய்து பாா்க்க முடியாது. காங்கிரஸ் கொள்கை சாா்ந்த கட்சி. இக்கொள்கையை ஒடுக்க சிலா் முயற்சிக்கலாம். ஆனால், கொள்கைக்கு அழிவில்லை.

ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு உற்சாகமளிக்கிறது. ராகுல் காந்தியுடன் லட்சக்கணக்கான மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறாா்கள். கா்நாடகத்தில் நடைபெற்று வரும் இந்நடைப்பயணமானது காங்கிரஸ் தொண்டா்கள், பொதுமக்களிடையே புது நம்பிக்கையை பாய்ச்சும்.

தலைவா் தோ்தலில் சசிதரூா் போட்டியிடுகிறாா். நாங்கள் அனைவரும் காங்கிரஸ் அணியைச் சோ்ந்தவா். இருவரும் ஒரே கொள்கையைச் சாா்ந்தவா்கள் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT