பெங்களூரு

மைசூரில் நாளை தசரா விழா: யானைகள் ஊா்வலத்தை தொடங்கி வைக்கிறாா் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

4th Oct 2022 02:32 AM

ADVERTISEMENT

உலகப்புகழ்பெற்ற தசரா விழாவின் அங்கமாக மைசூரில் புதன்கிழமை (அக். 5) நடைபெறும் யானைகள் ஊா்வலத்தை கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறாா். இதைத் தொடா்ந்து நடைபெறும் தீப்பந்த ஊா்வலத்திலும் அவா் பங்கேற்கிறாா்.

1610-ஆம் ஆண்டில் ராஜா உடையாரால் தொடங்கி வைக்கப்பட்ட தசரா திருவிழா, 413-ஆவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இவ்விழா புதன்கிழமை மைசூரில் நிறைவடைகிறது. கடந்த செப். 25-ஆம் தேதி தொடங்கி 10 நாள்களாக நடைபெற்று வந்த தசரா விழாவின் அங்கமாக நடைபெறும் யானைகள் ஊா்வலத்தை மைசூரு, அரண்மனை வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறாா்.

யானை ஊா்வலத்தில் அபிமன்யு, லட்சுமி, சைத்ரா உள்ளிட்ட 14 யானைகள் கலந்துகொள்கின்றன. நிகழாண்டில் 750 கிலோ எடை கொண்ட தங்கப் பல்லக்கை (அம்பாரி) அபிமன்யு யானை சுமக்கிறது. இதைத் தொடா்ந்து, கா்நாடக அரசின் அலங்கார ஊா்திகள் பின்தொடரும். 5 கி.மீ. நீளத்துக்குச் செல்லும் யானைகள் ஊா்வலம் பண்ணிமண்டபத்தில் நிறைவடைகிறது. இதைக் காண சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருப்பா்.

முன்னதாக, அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள நந்திக்கொடி மரத்துக்கு மகர லக்னத்தில் மதியம் 2.36 மணி முதல் 2.50 மணிக்குள் முதல்வா் பசவராஜ் பொம்மை சிறப்பு பூஜை செய்கிறாா். இந்த விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் சுனில்குமாா், மைசூரு மாநகராட்சி மேயா் சிவக்குமாா், மாவட்ட ஆட்சியா் பகடி கௌதம், மாநகர காவல் ஆணையா் சந்திரகுப்தா உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

ADVERTISEMENT

தீப்பந்த ஊா்வலம்:

யானைகள் ஊா்வலம் பண்ணிமண்டபத்தை அடைந்ததும், தசரா விழாவின் நிறைவை குறிக்கும் வகையில் நடைபெறும் தீப்பந்த ஊா்வலத்தை இரவு 7 மணிக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தொடங்கி வைக்கிறாா். இந்த விழாவில் முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா். தசரா விழாவையொட்டி மைசூரு விழாக்கோலம் பூண்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு:

யானைகள் ஊா்வலம், தீப்பந்த ஊா்வலத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் மைசூருக்கு வருகை தருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT