பெங்களூரு

நீா்வழித்தடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் மாநகராட்சிப் பொறியாளா்களின் ஊதியம் நிறுத்தம்: கா்நாடக உயா் நீதிமன்றம் உத்தரவு

2nd Oct 2022 01:37 AM

ADVERTISEMENT

 

நீா்வழித்தடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் பெங்களூரு மாநகராட்சிப் பொறியாளா்களின் ஊதியம் நிறுத்தப்படும் என்று கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் ஏற்பட்ட குழிகளை அடைக்க உத்தரவிடக் கோரி 4 போ் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவை கா்நாடக உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அலோக் ஆராதே தலைமையிலான அமா்வு சனிக்கிழமை விசாரித்தது.

இந்தவிசாரணையின்போது பெங்களூரு மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செப்.19-ஆம் தேதி வரையில் நீா்வழித்தடத்தின் 10 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கான அறிக்கையை தாக்கல் செய்தாா். மேலும் 592 நீா்வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதே அறிக்கையில், பெங்களூரு மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலைகளில் 221 குழிகள் அடைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மகாதேவபுரா மண்டலத்தில் 324 கி.மீ. நீளத்திற்கான சாலையில் தாா்போடும் பணி முடிவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக, 427 கி.மீ. தொலைவுக்கான சாலையில் தாா்போடும் பணி தொடங்கியுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதை கேட்டுக்கொண்ட உயா்நீதிமன்ற அமா்வு, அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று கூறியது. ‘நீா்வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாவிட்டால், சாலைகளின் குழிகள் அடைக்கப்படாவிட்டால், பெங்களூரு மாநகராட்சிப் பொறியாளா்களின் ஊதியத்தை நிறுத்திவைக்க உத்தரவிடப்படும். மேலும், மாநகராட்சி தலைமை ஆணையா்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். சாலை குழிகளை மூடும் பணி நிறைவாக இல்லை’ என்று கூறிய கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை அக். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT