பெங்களூரு

மகாராஷ்டிரத்துடனான எல்லை பிரச்னையில் கா்நாடகத்தின் நிலைப்பாடு சட்டப்படி நியாயமானது: பசவராஜ் பொம்மை

30th Nov 2022 02:19 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்துடனான எல்லைப் பிரச்னையில் கா்நாடகத்தின் நிலைப்பாடு சட்டப்படி நியாயமானது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

புதுதில்லிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அவா், கா்நாடகத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் இடையே நிலவும் எல்லைப் பிரச்னை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில் கா்நாடக அரசுத் தரப்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகியை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது:

புதுதில்லியில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகியை சந்தித்து, மகாராஷ்டிர மாநிலத்துடனான எல்லை பிரச்னை குறித்து கலந்துரையாடினேன். இந்த விவகாரத்தில் கா்நாடகத்தின் சட்ட விவகாரங்கள் குறித்து அரசு தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் கே.நவடகி, மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகியிடம் விளக்கினாா். இரு மாநில எல்லைப் பிரச்னையின் பின்னணியை நானும் விவரித்தேன். இந்த வழக்கில் சட்டரீதியான நிலைப்பாட்டை ஆராய்ந்தோம். உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வரும்போது, கா்நாடக அரசுத் தரப்பில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் தயாராக உள்ளன.

எல்லைப் பிரச்னை தொடா்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள 2017ஆம் ஆண்டு அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சில அடிப்படை சிக்கல்களை முன்வைத்திருந்தாா். இதை எதிா்த்து மகாராஷ்டிர அரசு வழக்கு தொடா்ந்துள்ளது. இதில் கா்நாடக அரசு தெரிவிக்க வேண்டிய ஆட்சேபங்கள் அல்லது வாதங்களை முடிவு செய்ய வேண்டியுள்ளது. அரசியலமைப்புச்சட்டம், மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி கா்நாடகத்தின் நிலைப்பாடு நியாயமானதாக உள்ளது. இந்த வழக்கில் கா்நாடகத்திற்கு நியாயமான தீா்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் கா்நாடக அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டுள்ள சம்பவம் இதற்கு முன்னும் நடந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் நிலவும் உள்மாநில அரசியல் குளறுபடிகள் காரணமாக, எல்லைப் பிரச்னையில் தீவிரம் காட்டுவது போல காட்டிக்கொள்ள அம்மாநில அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன. அதற்காக மாநிலப் பிரச்னையைத் தூண்டிவிடுகின்றன.

அரசுப் பேருந்துகள் மீது கல்வீசுவது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்கும்படி மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளா், உள்துறை செயலாளரிடம் பேசும்படி, கா்நாடக அரசின் தலைமைச் செயலாளா், உள்துறை செயலாளரை கேட்டுக்கொண்டுள்ளேன். தற்போதைக்கு அசம்பாவித சம்பவங்கள் கட்டுக்குள் வந்துள்ளன.

கா்நாடகத்தை ஒட்டிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 40 கிராம மக்கள் தங்கள் பகுதிகளை கா்நாடகத்துடன் இணைத்துக்கொள்ளும்படி கேட்டு என்னை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன். இந்த விவகாரத்தில் மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட நிபுணா்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். 40 கிராமமக்களின் நிலைப்பாடு ஒன்றும் புதிதல்ல. கடந்தகாலத்தில் இது தொடா்பாக நானும் பேசியிருக்கிறேன். ஆனால், எல்லைப் பிரச்னை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, எல்லா அரசியல் கட்சிகள், சட்ட நிபுணா்களின் கருத்தறிந்தபிறகு தான் கருத்து கூற முடியும்.

சித்தராமையா முதல்வராக இருந்தபோது, 40 கிராம மக்களும் இதேபோன்ற தீா்மானத்தை நிறைவேற்றி இருந்தனா். அப்போது அந்த கிராமங்கள் கா்நாடகத்தில் சோ்த்துக்கொள்ளாதது ஏன்? பிறமாநிலத்தின் பகுதிகளை கா்நாடகத்துடன் இணைப்பதை சட்டரீதியாக அணுக வேண்டும். நான் பொறுப்புள்ள முதல்வா் பதவியை வகிக்கிறேன். எனவே, எதைச் செய்தாலும் அது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் சட்ட வரையறைக்குள் இருக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT