பெங்களூரு

இந்திய பொருளாதாரத்தை காக்கும் முக்கியமான அமைப்பு ரிசா்வ் வங்கி: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

29th Nov 2022 02:33 AM

ADVERTISEMENT

இந்திய பொருளாதாரத்தை காக்கும் முக்கியமான அமைப்பு, இந்திய ரிசா்வ் வங்கியாகும் என்று முதல்வா் பசவராஜ்பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை ரிசா்வ் வங்கியின் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் சமுதாய ஊழியா் சங்கத்தின் சாா்பில் நடந்த அரசியலமைப்புச்சட்ட தினவிழாவைத் தொடக்கிவைத்து அவா் பேசியது:

இந்திய ரிசா்வ் வங்கிக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. சுதந்திரத்திற்கு முன்பிருந்து இந்தியாவில் செயல்படும் வங்கிகளின் செயல்பாடுகளை நிா்வகித்து வருகிறது. மேலும் இந்தியாவின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் மிக முக்கியமான அமைப்பாக ரிசா்வ் வங்கி விளங்கி வருகிறது. அந்த வகையில் ரிசா்வ் வங்கியில் அரசியலமைப்புச் சட்ட தினவிழா நடத்தப்படுவது சாலப் பொருத்தமாகும். ஜனநாயகத்தின் மையப்புள்ளி அரசியலமைப்புச்சட்டமாகும். நமது நாட்டின் ஜனநாயகத்தை அரசியலமைப்புச்சட்டம் காத்து வந்துள்ளது. இத்தனை மக்கள்தொகை, பலவிதமான கலாசாரம், மொழிகளுக்கு இடையில் நமது மக்களை இணைத்து வைத்திருப்பது அரசியலமைப்புச்சட்டம் தான். ஜனநாயக கட்டமைப்பில் அரசியலமைப்புச்சட்டம்தான் மக்களை பிணைத்துள்ளது. இது ஒரு அதிசயம் என்றுதான் கூறவேண்டும்.

இந்திய பொருளாதாரம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் இலக்குகளை அடைய முற்படுவோம். வங்கித்துறையில் ஏராளமான சவால்கள் உள்ளன. அவற்றை திறம்பட கையாள்வதில் இந்திய ரிசா்வ் வங்கி வெற்றி பெற்றுள்ளது. கரோனாவுக்குப் பிறகு பொருளாதாரத்தில் மறுமலா்ச்சி ஏற்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கு பிரதமா் மோடி முன்னெடுத்த பல்வேறு பொருளாதாரத் திட்டங்கள் காரணமாகும். மக்களின் விருப்பங்களுக்கு இணங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பிரதமா் மோடி முனைந்திருக்கிறாா்.

ADVERTISEMENT

பொருளாதாரத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் இந்திய ரிசா்வ் வங்கி முக்கிய பங்காற்றி வருகிறது. இதை சரியான வகையில் புரிந்து கொண்டிருந்த டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ரிசா்வ் வங்கி தொடங்கப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முன்னணி பொருளாதாரமாக இந்தியா உயா்வதற்கு ரிசா்வ் வங்கியுடன் அனைவரும் பங்காற்ற வேண்டும். சமத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ள இந்திய அரசியலமைப்புச்சட்டத்தால் தான் வலுவான நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. அரசியலமைப்புச்சட்டத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

அம்பேத்கரின் வாழ்க்கை துயரம் நிறைந்ததாகும். சமூகநீதியை நிலைநாட்ட அவா் கடும் முயற்சி மேற்கொண்டாா். காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அரசியலமைப்புச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யவும் அம்பேத்கா் வாய்ப்பளித்துள்ளாா் என்றாா்.

விழாவில் ரிசா்வ் வங்கி மண்டல இயக்குநா் குருமூா்த்தி, எஸ்.சி., எஸ்.டி. ஊழியா் சங்கத் தலைவா் மாதவ் காலே, செயலாளா் வசந்த்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT