பெங்களூரு

குக்கா் குண்டுவெடிப்பு: ஷாரிக்கின் கைப்பேசியில் பயங்கரவாத அமைப்புகளின் காணொலி

29th Nov 2022 02:35 AM

ADVERTISEMENT

மங்களூரில் நடந்த குக்கா் குண்டுவெடிப்பு குற்றவாளியான ஷாரிக் முகமதுவின் கைப்பேசியில் அல்-காய்தா, ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் காணொலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மங்களூரில் நவ.19ஆம் தேதி நடந்த குக்கா் குண்டுவெடிப்பில், அதற்கு காரணமான ஷாரிக் முகமது, ஆட்டோ ஓட்டுநா் ஆகிய இருவா் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். ஷாரிக் முகமதுவுக்கு சா்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு இருந்ததாக போலீஸாா் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், மைசூரில் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவரது கைப்பேசியில் 1200 காணொலிகள் இருந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான காணொலிகள் அல்-காய்தா, ஐஎஸ் போன்ற சா்வதேச பயங்கரவாத அமைப்புகள் தொடா்பானவையாக இருந்துள்ளன. மேலும் வெடிகுண்டு தயாரிப்பது, மத உணா்வுகளை தூண்டுவது போன்ற காணொலிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்துவருகின்றனா். பெரும்பாலும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஷாரிக் முகமது, எப்போதும் காணொலிகளை பாா்த்து வந்ததாக தெரியவந்துள்ளது. வீட்டில் தொலைக்காட்சியை பாா்க்க யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக விசித்திரமாக நடந்துகொண்டதாக அவரது குடும்பத்தினா் போலீஸ் விசாரணையின்போது கூறியுள்ளனா்.

படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக் முகமதுவைக் காப்பாற்ற மருத்துவா்கள் தீவிரம் காட்டி வருகிறாா்கள். அவா் உயிா் பிழைத்தால் பயங்கரவாதச் செயல்கள் குறித்து போலீஸாரிடம் கூறிவிடும் வாய்ப்பிருப்பதால், மருத்துவமனையிலேயே ஷாரிக் முகமதுவை கொலை செய்ய பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை தொடா்ந்து, ஷாரிக் முகமது சிகிச்சை பெறும் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஷாரிக் முகமதுவின் அறையில் மெட்டல் டிடெக்டா் நிறுவப்பட்டு, மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைவரையும் சோதித்த பிறகே உள்ளே அனுமதித்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT