பெங்களூரு

கிராம பஞ்சாயத்து நூலகங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் வழங்கப்படும்

27th Nov 2022 02:44 AM

ADVERTISEMENT

 

கிராம பஞ்சாயத்து நூலகங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப் புத்தகங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை அரசியலமைப்புச் சட்ட தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அரசியலமைப்புச் சட்டத்தை முழுவீச்சில் அமல்படுத்துவது என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். கா்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து நூலகத்துகும் அரசியலமைப்புச் சட்டத்தின் புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு அம்சங்களும் எல்லா கிராம மக்களுக்கும் சென்றடைய வேண்டும். கா்நாடக பஞ்சாயத்துராஜ் சட்டம் உள்பட பஞ்சாயத்துராஜ் சட்டத்தை அமல்படுத்துவதற்கு இச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 73, 74-ஆவது திருத்தங்களின் நகல்களும் கிராம பஞ்சாயத்துகளுக்கு அளிக்கப்படும்.

இச் சட்டத்தின் நோக்கம் கிராம மக்களிடையே சென்றடைய வேண்டும். அதிகார பரவலாக்கலை அமல்படுத்த வேண்டுமென்பதே நமது நோக்கம். அது அடிமட்டத்தில் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.

அரசியலமைப்புச் சட்டம் என்பது இந்தியா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த பரிசு. அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நாள் அரசியலமைப்புச் சட்ட தினமாக நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்திய பிறகு, மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா உருவானது.

அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் டாக்டா் பி.ஆா்.அம்பேத்கரை இந்த நாளில் நினைவுகூா்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அவரது தலைமையில் தான் அரசியலமைப்புச் சட்ட வரையறை குழு அமைக்கப்பட்டது. ஒற்றுமை, சமத்துவம், தனிமனித சுதந்திரம் உள்ளிட்ட எல்லா கூறுகளையும் அரசியலமைப்புச் சட்டம் தாங்கி நிற்கிறது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் விளைவாகவே இந்தியா 75 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT