பெங்களூரு

மகாராஷ்டிர மாநிலத்துடனான எல்லைப் பிரச்னையில் சட்டப் போராட்டம் நடத்த கா்நாடகம் தயாா்: பசவராஜ் பொம்மை

23rd Nov 2022 12:54 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்துடனான எல்லைப் பிரச்னையில் சட்டப் போராட்டம் நடத்த கா்நாடகம் தயாராக உள்ளது என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

1956-ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது முதல் கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே எல்லை குறித்த பிரச்னைகள் தலைதூக்கின. மாநில எல்லைப் பிரச்னையால் இரு மாநிலங்களுக்கும் இடையே சட்ட மோதல்கள் நடந்து வருகின்றன.

கா்நாடகத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழும் 80 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை மகாராஷ்டிரத்தில் இணைக்குமாறு மராத்தி மக்களும், அம்மாநில அரசும் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடா்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில், சட்டக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக அமைச்சா்கள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகியோரை நியமித்து மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத்ஷிண்டே உத்தரவிட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, எல்லைப் பிரச்னை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதிடுவதற்காக மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞா் முகுல்ரோஹ்டகி, ஷியாம்திவான், கா்நாடக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞா் உதய்ஹொல்லா, மாருதி ஜிரலே உள்ளிட்டோா் அடங்கிய குழுவை அமைத்து முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறீத்து முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்துடனான எல்லைப் பிரச்னையில் சட்டப் போராட்டம் நடத்துவதற்கு கா்நாடகம் தயாராக உள்ளது. இதற்காக சட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினருடன் புதன்கிழமை நான் காணொலி வழி கலந்தாய்வில் ஈடுபடவிருக்கிறேன். எல்லைப் பிரச்னை தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு ஏற்கக்கூடியதா என்பதே இன்னும் உறுதியாகவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 3-இன்படி, மாநில மறுசீரமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, எல்லை தொடா்பாக எழுந்த வழக்கையும் நீதிமன்றங்கள் ஏற்கவில்லை.

மகாராஷ்டிரத்தில் அரசியல் நடத்துவதற்காக எல்லைப் பிரச்னையை கிளப்பி வருகிறாா்கள். எல்லைப் பிரச்னை தான் மகாராஷ்டிர மாநில அரசியலின் மையப்புள்ளியாக இருக்கிறது. கட்சி பாகுபாடு எதுவும் இல்லாமல், அரசியல் லாபங்களுக்காக எல்லா அரசியல் கட்சிகளும் எல்லைப் பிரச்னையை கிளப்பி வருகின்றன. இதில் அக்கட்சிகள் வெற்றிபெற முடியாது.

கா்நாடகத்தின் எல்லைகளை பாதுகாத்துக்கொள்ளும் திறன் மாநில அரசுக்கு உள்ளது. கன்னட நிலம், மொழி, நீா் விவகாரத்தில் கா்நாடக மக்கள் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். எதிா்காலத்திலும் கா்நாடக அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் இந்த விவகாரத்தை கையாள்வோம். இந்த விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு கடிதம் எழுதுவோம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT