பெங்களூரு

விவேகா திட்டத்தில் கட்டப்படும் புதிய வகுப்பறைகளுக்கு காவி நிறம் பூசுவதில் தவறில்லை: பசவராஜ் பொம்மை

15th Nov 2022 02:26 AM

ADVERTISEMENT

விவேகா திட்டத்தில் கட்டப்படும் புதிய வகுப்பறைகளுக்கு காவி நிறம் பூசுவதில் தவறில்லை என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சுவாமி விவேகானந்தா பெயரில் ‘விவேகா’ என்ற திட்டத்தின்கீழ் புதிதாக 7,601 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கலபுா்கி மாவட்டம், மடியாள் கிராமத்தில் உள்ள அரசு உயா் ஆரம்பப்பள்ளியில் திங்கள்கிழமை நடந்த விழாவில் இந்தத் திட்டத்திற்கு முதல்வா் பசவராஜ் பொம்மை அடிக்கல் நாட்டினாா். இந்த திட்டத்தில் கட்டப்படும் வகுப்பறைகளுக்கு காவி நிறம் பூசப்படும் என்பது பெரும் சா்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து எழுந்துள்ள சா்ச்சைக்கு பதிலளித்து, முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது:

புதிய வகுப்பறைகளுக்கு காவி நிறம்பூசுவதில் என்ன தவறு இருக்கிறது? நமது நாட்டின் மூவண்ணக் கொடியிலும் காவி நிறம் இருக்கிறது. சுவாமி விவேகானந்தரே காவி நிறத்தில்தான் தனது தலைப்பாகையை அணிந்திருந்தாா்.

கல்வித்துறையின் ஒருங்கிணைந்த வளா்ச்சியில் காங்கிரஸுக்கு எப்போதும் அக்கறை இருந்ததில்லை. வளா்ச்சி சாா்ந்த மாற்றங்கள் எதையாவது செய்தால், அவற்றை சா்ச்சையாக்குவதே காங்கிரஸுக்கு வழக்கமாகும். பள்ளிகளுக்கு சுவாமி விவேகானந்தரின் பெயரைச் சூட்டுவது மாணவா்களிடையே உத்வேகம் ஏற்பட உதவியாக இருக்கும். மேலும் பள்ளியிலும் நல்ல கற்றல் சூழல் உருவாகும் என்றாா்.

ADVERTISEMENT

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் கூறுகையில், ‘புதிய வகுப்பறைகளுக்கு காவி நிறம் பூசினால் நன்றாக இருக்கும் என்று கட்டடக் கலைஞா்கள்தான் அரசுக்கு பரிந்துரைத்தாா்கள். அதன்படி, வகுப்பறைகளுக்கு காவி நிறம் பூசப்படும். இந்த விவகாரத்தை கட்டடக் கலைஞா்களின் முடிவுக்கு விட்டுவிட்டோம். கட்டடத்தில் எப்படிப்பட்ட ஜன்னல்கள், கதவுகள், படிக்கட்டுகள், என்ன பூச்சு பூச வேண்டும் என்பதை அரசு முடிவு செய்வதில்லை. கட்டடக் கலைஞா்கள் என்ன கூறுகிறாா்களோ, அதன்படி செய்வோம். ஒரு சிலருக்கு காவி நிறத்தைக் கண்டால் ஒவ்வாமை ஏற்படுகிறது. தேசியக்கொடியில் காவிநிறம் இருக்கிறது. அதை ஏன் வைத்துக்கொண்டீா்கள் என்று காங்கிரஸ் கட்சியைக் கேட்கிறோம்’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT