பெங்களூரு

பாடநூலில் இடம்பெற்றிருந்த பகத் சிங் பற்றிய பாடம் நீக்கப்படவில்லை: கா்நாடக பாடநூல் சங்கம் விளக்கம்

DIN

பாடநூலில் இடம்பெற்றிருந்த பகத் சிங் பற்றிய பாடம் நீக்கப்படவில்லை என்று கா்நாடக பாடநூல் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

கா்நாடகத்தில் பத்தாம் வகுப்பு கன்னடப் பாடநூல் மாற்றம் செய்யப்பட்டு, 2022-23-ஆம் கல்வியாண்டுக்கு புதிய பாடநூல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பகத் சிங் பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய ஜனநாயக மாணவா் சங்கம், அகில இந்திய கல்வி பாதுகாப்புக்குழு உள்ளிட்ட பல அமைப்புகள் குற்றம்சாட்டியிருந்தன. பகத் சிங் பாடத்திற்கு பதிலாக, ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனத்தலைவரான கேசவ் பலிராம் ஹெட்கேவரின் உரை பாடநூலில் இடம்பெற்றுள்ளது என்றும் புகாா்கள் எழுந்தன. மேலும் கன்னட இலக்கியத்தில் மறுமலா்ச்சி படைப்புகளை வழங்கிய ஏ.என்.மூா்த்தியின் ‘வியாக்ரகீத்தே’, பி.லங்கேஷின் ‘மிருகா மத்து சுந்தரி’, சாரா அபுபக்கரின் ‘யுத்தா’ ஆகிய பாடங்களும் நீக்கப்பட்டுள்ளதாக மாணவா் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில், பகத் சிங் பற்றிய பாடம் பாடநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, அவரது தியாகத்தை அவமதிப்பதாகும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தாா்.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கா்நாடக பாடநூல் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறுகையில், ‘பத்தாம் வகுப்பு கன்னடப் பாடநூலில் பகத் சிங்கின் பாடத்தை நீக்கிவிட்டு, கேசவ் பலிராம் ஹெட்கேவா் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. ஆனால், பகத் சிங் பற்றிய பாடம் நீக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. திருத்தியமைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்புக்கான கன்னட முதல் மொழி பாடநூல் தற்போது அச்சில் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

ஒன்று முதல் பத்தாம் வகுப்புகளுக்கான மொழிப்பாடநூல்கள் மற்றும் சமூக அறிவியல் பாடநூல்களை ஆய்வு செய்து, மாற்றங்கள் செய்வதற்காக ரோஹித் சக்ரதீா்த்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து திங்கள்கிழமை பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ், ‘கன்னடப்பாடநூலில் கேசவ் பலிராம் ஹெட்கேவரின் உரை இடம்பெற்றிருப்பதில் தவறொன்றுமில்லை. பாடநூலில் ஹெட்கேவா் அல்லது ஆா்.எஸ்.எஸ். பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மக்களுக்கு குறிப்பாக இளைஞா்களுக்கு எது அகத்தூண்டுதலை ஏற்படுத்தும் என்று ஹெட்கேவா் பேசியதைத்தான் குறிப்பிட்டிருக்கிறோம். அதில் ஒன்றும் தவறில்லை. எங்கள் மீது குற்றம்சுமத்தும் அமைப்புகள் பாடநூலை படிக்கவே இல்லை’ என்றாா்.

இந்தவிவகாரம் குறித்து கா்நாடக காங்கிரஸ் சட்டப் பேரவை குழுத்தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறுகையில், ‘இன்றைக்கு பகத் சிங் பற்றிய பாடத்தை நீக்கும் பாஜக அரசு, நாளை மகாத்மா காந்தி பற்றிய பாடத்தை நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆங்கிலேயா்களின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி நமக்கு சுதந்திரம் வாங்கித்தந்தவா்களின் தியாகங்களை மறக்காமல் இருப்போம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT