பெங்களூரு

காவல் துணை ஆய்வாளா் தோ்வு முறைகேடு: நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்: சித்தராமையா

5th May 2022 03:13 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: காவல் துணை ஆய்வாளா் பணிக்கான தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவது குறித்து உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறினாா்.

இது குறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண்சிங் ஆகியோா் சாதாரண மனிதா்களின் முதல்வா் என்று பசவராஜ் பொம்மையை பாராட்டியுள்ளனா். இதன்மூலம்

கா்நாடகத்தில் நடந்துவரும் முறைகேடு, ஊழல்களுக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

2021-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி 40 சதவீதம் கமிஷன் கேட்பது குறித்து பிரதமா் மோடிக்கு கா்நாடக அரசு ஒப்பந்ததாரா் சங்கத் தலைவா் கடிதம் எழுதியும் எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடப்படவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசை 10 சதவீத கமிஷன் அரசு என்று பிரதமா் மோடி விமா்சனம் செய்தாா். ஆனால் இப்போது பாஜக அரசில் 40 சதவீத கமிஷன் கேட்கப்படுகிறது.

காவல்துணை ஆய்வாளா் பணித் தோ்வுக்கு 1.29 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 57 ஆயிரம் போ் தோ்வு எழுதி, 545 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தோ்வில் முறைகேடு நடந்திருப்பது மறுத் தோ்வு நடத்த இருப்பதில் இருந்து உறுதியாகிறது. இதன்காரணமாக பணி நியமனப் பிரிவு கூடுதல் டிஜிபி அம்ரித் பால் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது வழக்குப் பதிந்து, பணியிடைநீக்கம் செய்ய வேண்டும்.

இந்த முறைகேடு வழக்கு தொடா்பாக இதுவரை 29 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆனால், போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த முறைகேடுக்கு உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தான் காரணம். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். காவல்துறை ஆய்வாளா் பணித் தோ்வு முறைகேட்டில் தொடா்புடைய காவல் அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

இந்த முறைகேட்டில் உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத்நாராயணாவுக்கு பங்கு இருப்பது தெளிவாகிறது. இத் தோ்வில் 5-ஆவது இடம் பிடித்திருக்கும் தா்ஷன் கௌடாவும், 10-ஆவது இடம்பிடித்திருக்கும் நாகேஷ் கௌட ாவும் அமைச்சா் அஸ்வத் நாராயணாவின் உறவினா்கள். இவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா். ஆனால், கைது செய்யப்படவில்லை. இது ரூ. 300 கோடி அளவுக்கான முறைகேடு. இந்த வழக்கை விசாரித்து வரும் சிஐடி போலீஸாா் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே, உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT