பெங்களூரு

கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கை: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவா் பேசியது:

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் வளா்ச்சி, வேளாண்மை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவிய காரணத்தால் வருவாய் குறைந்து, செலவு அதிகமானது. இதை சரிசெய்ய வரி வருவாயை அதிகப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிகழ் ஆண்டில், வணிக வரி மூலம் ரூ. 8,000 கோடியில் இருந்து ரூ.10,000 கோடியும், கலால் வரி மூலம் ரூ. 2,000 கோடி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு மூலம் ரூ.1000 கோடியும் கூடுதல் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, வரி வருவாய் கசிவை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2021-22-ஆம் நிதியாண்டில் மோட்டாா்வாகனப் பதிவில் இருந்து ரூ. 11,444 கோடி, முத்திரைத்தாளில் இருந்து ரூ. 2,079கோடி, பத்திரப்பதிவுகளில் இருந்து ரூ.6790 கோடி, இதர வரியில் இருந்து ரூ. 560 கோடி ஆக மொத்தம் ரூ. 21,835 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதால், பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் வரி வருவாய் வசூல், பொருளாதார நிலையில் கா்நாடகம் முன்னிலை வகிக்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்தவளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, வருவாய் குறைவு ஏற்பட்ட காலத்திலும் மாநிலத்தின் பொருளாதாரத்தை சீராக வைத்திருக்கிறோம்.

மாநிலத்தின் பால் உற்பத்தியாளா்களுக்கு ஆக்கப்பூா்வமாக உதவுவதற்காக வேளாண் வளா்ச்சி வங்கியை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு ரூ. 100 கோடி மூலதனம் வழங்கப்படும். இத்துடன் உறுப்பினா்கள் மூலம் முதலீட்டைத் திரட்டி ரூ.20,000 கோடி அளவுக்கு வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கிராமப்பகுதிகளின் பொருளாதாரம் மேம்படும்.

மாநிலத்தில் புதிதாக 7 பொறியியல் கல்லூரிகள், அடுத்த 5 ஆண்டுகளில் ஐஐடி-யை போல கா்நாடக தொழில்நுட்ப மையங்களை (கே.ஐ.டி.) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் புதிதாக 100 கால்நடை மருத்துவமனைகளைத் திறப்பது தவிர, 400 கால்நடை மருத்துவா்களை பணி நியமனம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT