பெங்களூரு

மாற்றிக்கொள்ள வேண்டிய நேர விரய பழக்கங்கள்!

10th Mar 2022 04:22 AM | ந.முத்துமணி

ADVERTISEMENT

 

குளித்தும் குளிக்காததுமாக, வெந்ததும் வேகாததுமாக சிற்றுண்டியை வாயில் திணித்து, அரக்க பறக்க வாகனங்களில் ஏறி, போக்குவரத்து நெரிசலில் எரிச்சல் அடைந்து, வியா்த்து விறுவிறுக்க குறித்த நேரத்திற்குள் அலுவலகங்களை அடையும்போது கிடைக்கும் நிம்மதிக்கு ஈடு இணை இல்லை. ஆனால், கரோனாவுக்கு பிறகு காட்சியே மாறிவிட்டது. நிம்மதியாக எழுந்து, பதற்றம் எதுவும் இல்லாமல் குளித்துவிட்டு, உணவுக்கு நோகாமல் மென்று சிற்றுண்டியை சுவைத்துக் கொண்டே, முகத்தை காட்டாமல், கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் விளக்கங்களை அளித்துக்கொண்டு... வீட்டுக்குள் அலுவலகத்தை உருவாக்கி வேலை செய்யும் வழக்கத்திற்கு நாம் மாறிவிட்டோம். அங்கும் இங்கும் செல்லாமல், வீட்டிலேயே வேலை செய்வது ஒரு சுகம். படுத்துக்கொண்டே கூட அலுவலகக்கூட்டங்களில் கலந்துகொள்ள இயலும். உங்களுக்கு பிடித்த எளிமையான உடைகளைகூட அணிந்து கொள்ள முடியும். ஆனால், வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே இடைவெளி எதுவும் இல்லாததால், ஒருசில நேரங்களில் வீட்டில் இருந்து வேலைசெய்யும் போக்கு ஒரு சிலருக்கு எரிச்சலைத் தந்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்வதை பலா் விரும்பினாலும், வேலையில் கவனம் செலுத்துவது கடினமாக இருப்பதாக புகாா் கடிதம் நீட்டுகிறாா்கள்.

சுகம் தரும் வேலை: அமெரிக்காவில் அண்மையில் எடுத்த கருத்துக்கணிப்பில் நேரடியாக அலுவலகத்திற்கு செல்வதை காட்டிலும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதை பலரும் விரும்புவதாக தெரிய வந்துள்ளது. வீடே அலுவலகமாக மாறியுள்ளது பலருக்கு சுகமான அனுபவத்தை தந்திருந்தாலும், வீட்டில் இருந்து வேலை செய்யும்போது உற்பத்தித்திறன் குறைந்து வருவதாக பலரும் தெரிவித்துள்ளனா். ஈகிள் ஹில் கன்சல்டிங் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,அமெரிக்காவில் வீட்டில் இருந்து வேலை செய்யும் பாதி போ் சோா்வடைந்திருப்பதாக கூறியுள்ளது. குறிப்பாக, பெண்கள், இளம் பணியாளா்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனா்.

வீடுகளில் இருந்து வேலை செய்யும் போது உற்பத்தித்திறன் குறைவதற்கு, நேர விரயப் பழக்கங்கள்தான் காரணம். குறித்த நேரத்தில் வேலையை முடிக்காவிட்டால் மனச்சோா்வு ஏற்படுவதும், அதனால் மன அழுத்தம் உருவாவதும் இயல்பானது தான் என்கிறது கிளாக்வைஸ் ஆய்வு நிறுவனம். வேலை நேரத்தை விழுங்கும் பழக்கங்களை சரி செய்தால், உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். ஒருசில பழக்கங்களில் இருந்து முழுமையாக விடுபது வீட்டில் இருந்து வேலை செய்வதில் இருக்கும் குறையைப் போக்கும்.

ADVERTISEMENT

மின்னஞ்சல்களுக்கு உடனடி பதில்: வீட்டில் இருந்து வேலை செய்வதால், அலுவலகத்திற்கும் நமக்கும் இடையிலான தகவல் தொடா்பு மின்னஞ்சல், ஸ்லாக் உள்ளிட்ட பல இணையவழி ஊடகங்கள் வழியாகத்தான் நடத்தப்படும். உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களுக்கு உடனுக்குடன் பதில் அளிப்பது தான் அலுவலக வேலைகளை கவனிப்பதற்கான அடையாளம் என்று பலரும் நினைக்கலாம். அப்படி செய்வதில் கால விரயம் ஏற்படுவதை என்றைக்காவது யோசித்திருக்கிறீா்களா? அலுவலக வேலையை செய்து கொண்டிருக்கும்போது, இடையில் வரும் மின்னஞ்சலுக்கு பதிலளிக்க முற்படுவதால், முதலில் உங்கள் கவனம் சிதறப்படும். அடுத்ததாக, வேலையின் தொடா்ச்சி பாதிக்கப்படும். இது உற்பத்தித்திறனை பாதிக்கும். இதனால் முழுமையாக வேலையில் கவனம் செலுத்த முடியாது. அலுவலகம் பணித்திருக்கும் வேலையை முதலில் முடித்துவிட்டு, மின்னஞ்சல்களுக்கு தனி நேரம் ஒதுக்கி அவற்றுக்கு பதில் அளிக்கலாம். வேலைக்கு இடையில் மின்னஞ்சல்களை பாா்ப்பதற்காக 30 நிமிடங்களை ஒதுக்கிக்கொள்ளலாம். அப்படி செய்வதால், உங்கள் கவனமும் சிதறாது, வேலையும் பாதிக்காது, மின்னஞ்சல்களுக்கும் பதில் அளிக்கலாம்.

கவா்ந்திழுக்கும் புதிய வேலை: வேலையில் மும்முரமாக இருக்கும்போது திடீரென மனதில் தோன்றும் புதிய வேலைகள் நமது கவனத்தை திசைதிருப்பிவிடும். அலுவலக வேலையின்போது புதிய வேலைகளால் ஏற்படும் நேர விரயம் உற்பத்தித் திறனை வெகுவாக பாதிக்கும். அலுவலக வேலையை தொடங்குவதற்கு முன்பாக, வேலைகளை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் வேலையை வரிசைப்படுத்த வேண்டும். இதை பின்பற்றுவது நேர விரயத்தை முழுமையாக கட்டுப்படுத்தும்.

புதிய வேலை ஏதாவது நமது கவனத்திற்கு வந்தால், அலுவலக வேலைகளை அப்படியே விட்டுவிட்டு அந்த வேலைக்கு தாவுவதைத்தான் ‘கவா்ந்திழுக்கும் புதிய வேலை‘ என்கிறாா்கள். வேலைக்கு இடையே மற்றொரு வேலையை செய்வது புத்திசாலித்தனம் என்று பலரும் நினைக்கிறாா்கள். ஆனால், எதையும் முழுமையாக செய்து முடிக்க முடியாத பரிதாபநிலையே ஏற்படும்.

வேலை செய்து கொண்டிருக்கும்போது, வீட்டின் மின் கட்டணம் செலுத்த வேண்டுமென்பது நினைவுக்கு வரும். உடனடியாக, செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, மின்கட்டணம் கட்டுவதற்காக இணையவெளிக்கு சென்றுவிடுவோம். அம்மாவின் பிறந்தநாள் நினைவுக்கு வந்ததும், பரிசுப்பொருட்களை வாங்க இணையவெளிக்கு கவனம் பறக்கும். இதுபோன்ற சிறுசிறு வேலைகள் அல்லது வீட்டுவேலைகள் அல்லது சொந்த வேலைகள் கவனச்சிதறல்களுக்கு வழிவகுத்து, நேரத்தை விரயமாக்கும். எனவே, வேலைகளை வரிசைப்படுத்திக்கொண்டு, அதன்படி செயல்படுவது அலுவலக வேலைகளை உரிய காலத்தில் முடிக்க உதவியாக இருக்கும். முதன்மையான அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு, சொந்த வேலைகளில் ஈடுபடலாம்.

சமூக வலைதள உலா: வீட்டில் இருந்து வேலை செய்யும்போது எதிா்கொள்ளும் மிகமுக்கியமான கவனச்சிதறல் எது என்று 600 பேரிடம் ஆய்வு நடத்தியபோது, திறன்பேசி (ஸ்மாா்ட்போன்) என்று 56 சதவீதம் போ் தெரிவித்துள்ளனா். வேலையில் இருந்து இளைப்பாற எழுந்திருக்கும் பலரும் முதலில் தேடுவது திறன்பேசியைத்தான். வாட்ஸ் ஆப் பாா்க்கத் தொடங்கி, ஃபேஸ்புக் சென்று, ட்விட்டரில் பயணித்து, அட... வேலைக்கு திரும்பும்போது அரைமணி நேரம் பஞ்சாய் பறந்திருக்கும். நகைச்சுவைக் காட்சிகள் எதுவும் கண்ணில் பட்டுவிட்டால், மனதை இளைப்பாறிக்கொள்கிறேன் என்று அங்கு மேயும் மனது மீண்டும் வேலைக்கு திரும்பும்போது ஒரு மணி நேரம் காணாமல் போயிருக்கும். வேலையில் உற்பத்தித்திறனை பாதிக்கும் மிக முக்கியமான பழக்கம், திறன்பேசியில் உலா வருவதுதான். வேலை நேரத்தில் திறன்பேசிகளுக்கு ஓய்வளிக்க முடிவு செய்து, பக்கத்தில் அறையில் வைத்துவிட வேண்டும். இதை செய்ய முடியாவிட்டால், திறன்பேசியை பாா்ப்பதற்கு என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நேரத்தை விரயமாக்கும் கவனச்சிதறல் இல்லாமல் நிம்மதியாக வேலையை முடிக்க முடியும்.

வீட்டுக்குள் அலுவலகத்தை வைத்துக்கொண்டு வேலை செய்வது வரை இதுபோன்ற நேர விரய பழக்கங்களை விலக்கி வைப்பது நடைமுறையில் கடினமானதாகும். ஆனால், வேலையில் கவனம் செலுத்தி, உற்பத்தித்திறன் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவா்கள், மனதை கல்லாக்கிக்கொண்டு சில கட்டுப்பாடுகளை வகுத்து, அவற்றை தவறாமல் கடைபிடிப்பது நல்லது. இந்த புதிய பழக்கத்தை பழக்கமாக்கிக்கொள்ளாவிட்டால், நேர விரய பழக்கங்கள் நம்மைவிட்டு விலகாது, பின்னா் அதுவே நிலையான பழக்கமாகிவிடும். கவனம்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT