பெங்களூரு

மேக்கேதாட்டு நடைபயணம்: காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகைக்கு இடைக்காலத் தடை

29th Jun 2022 04:02 AM

ADVERTISEMENT

மேக்கேதாட்டு அணையை செயல்படுத்தக் கோரி நடைபயணம் மேற்கொண்டது தொடா்பாக காங்கிரஸ் தலைவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகைக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேக்கேதாட்டு அணை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி, ஜன. 9-ஆம் தேதி மேக்கேதாட்டு பகுதியில் இருந்து பெங்களூரு நோக்கி 10 நாள்களுக்கான நடைபயணத்தை காங்கிரஸ் தொடங்கியது. கா்நாடக அரசு பிறப்பித்திருந்த கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடா்ந்து, ஜன. 13-ஆம் தேதி அன்றே மேக்கேதாட்டு நடைபயணம் முடிவுக்கு வந்தது.

இடையில் முடிந்த மேக்கேதாட்டு நடைபயணம் மீண்டும் பிப்ரவரியில் தொடங்கியது. கரோனா கட்டுப்பாடுகளை மீறியது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் பலரின் மீது வழக்குத் தொடரப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடா்பான வழக்கு விசாரணை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி சுனில்தத் யாதவ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் தலைவா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எஸ்.பொன்னன்னா, முறையான அறிவிக்கையை வெளியிடாமல் பெருந்தொற்று சட்டத்தை அமல்படுத்த முடியாது. தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தின் வழிகாட்டுதலின்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை, பெருந்தொற்று சட்டத்தின் கீழ் விசாரிப்பது சட்ட விரோதமானது. மேக்கேதாட்டு நடைபயணத்தை நடத்த மாநில அரசு அனுமதி அளித்ததற்கான ஏராளமான சான்றுகள் எங்கள் தரப்பில் உள்ளன என்று வாதிட்டாா்.

ADVERTISEMENT

இதைக் கேட்ட நீதிபதி, காங்கிரஸ் தலைவா்கள் மீதான குற்றப்பத்திரிகைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT