பெங்களூரு

சட்டப் பேரவை தோ்தலை கூட்டுத் தலைமையின் கீழ் காங்கிரஸ் சந்திக்கும்: கா்நாடக முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வரா

26th Jun 2022 06:04 AM

ADVERTISEMENT

 

கா்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலை கூட்டுத் தலைமையின்கீழ் காங்கிரஸ் சந்திக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வரா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலை கூட்டுத் தலைமையின்கீழ் காங்கிரஸ் சந்திக்கும் என்று கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் ஏற்கெனவே கூறியிருக்கிறாா். காங்கிரஸ் கட்சியில் என்னை ஓரங்கட்டுவதாகவும், அதனால் நான் பாஜகவில் இணையவிருப்பதாகவும் கூறப்படும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை. கட்சியில் எனக்கு உரிய பதவி வழங்கவில்லை என்ற வருத்தம் எனக்கில்லை.

ADVERTISEMENT

கா்நாடக காங்கிரஸ் தலைவராக தொடா்ச்சியாக 8 ஆண்டுகளாகப் பணியாற்றி இருக்கிறேன். மேலும் கூட்டணி ஆட்சிக்காலத்தில் துணை முதல்வராகவும் இருந்துள்ளேன். எனவே, நான் கட்சியில் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறுவது சரியல்ல.

கா்நாடக முதல்வராக தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா் வர வேண்டுமென்று பலரும் கூறி வருகிறாா்கள். ஆனால், தற்போது காங்கிரஸ் முன் உள்ள ஒரே குறிக்கோள், கா்நாடகத்தில் காங்கிரஸை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான். அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு யாா் முதல்வா் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

காங்கிரஸ் கட்சியில் முதல்வா் பதவிக்கு பலரும் போட்டியில் இருப்பதில் ஆச்சரியமில்லை. பல ஆண்டுகளாக கட்சியின் வளா்ச்சிக்காக உழைத்தவா்கள் முதல்வா் பதவியை எதிா்பாா்ப்பது இயல்பானதுதான். ஆனாலும், கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் யாா் என்பது முடிவு செய்யப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT