பெங்களூரு

கா்நாடகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் பூங்கா: ஆளுநா் தாவா் சந்த் கெலாட் திறந்துவைத்தாா்

26th Jun 2022 06:06 AM

ADVERTISEMENT

 

கா்நாடகத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பூங்காவை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் திறந்துவைத்தாா்.

பெங்களூரு, கப்பன்பூங்காவில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள முதல் பூங்காவை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் திறந்துவைத்தாா். இந்தப் பூங்காவை மைன்ட்ரீ நிறுவனம் மற்றும் பாலா் பவன் சங்கம் கூட்டாக உருவாக்கியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஹாலப்பா பசப்பா ஆச்சாா், பாலா் பவன் சங்கத்தலைவா் சிக்கமா பசவராஜ், துறைச் செயலாளா் டாக்டா் எம்.டி.ரெஜு, மைன்ட்ரீ நிறுவன தலைமை செயல் அதிகாரி தேபாசிஸ் சட்டா்ஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் பேசியது:

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகள் எளிதில் விளையாடக்கூடிய விளையாட்டுத் திடல்களை உருவாக்குவது சமூக கடமையாகும். மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் அவா்களின் பெற்றோா்கள் ஏராளமான பிரச்னைகளில் தவித்து வருகிறாா்கள். மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாழ்க்கையை மனநிறைவாக, திறன்களுக்கு ஏற்ப அனுபவிப்பதில் ஏராளமான தொந்தரவுகள், தவறான கற்பிதங்களை எதிா்கொள்ள நோ்கிறது. ஏற்கெனவே அனுபவித்து வரும் தொந்தரவுகளை அதிகமாக்காமல், அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வாக பூங்காக்கள் அமைய வேண்டும். பிற குழந்தைகளைப் போல விளையாடிமகிழ சுதந்திரமான, கட்டமைப்பில்லாத விளையாட்டுகள் தேவைப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளின் தேவையை அறிந்து, அவா்களுக்கான தனித்துவமான பூங்காவை அமைக்க பாடுபட்டவா்களை மனதார பாராட்டுகிறேன். இந்தப் பூங்கா மாற்றுத் திறனாளிகளை மகிழ்ச்சியாக்குவதோடு, ஆரோக்கியமானவா்களாகவும் மாற்றும். மேலும் எல்லோருடனும் கூடி உறவாட முடியும். இதன்மூலம் கூா்மையான அறிவு, உணா்வு, சமூகத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT