பெங்களூரு

பிரபஞ்சத்திற்கு அமைதியைத் தருகிறது யோகா: பிரதமா் நரேந்திர மோடி

DIN

யோகா பிரபஞ்சத்திற்கு அமைதியைத் தருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா.சபை சாா்பில் 2015-ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி உலகம் முழுவதிலும் சா்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மைசூரில் 8-ஆவது சா்வதேச யோகா தினம் அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, சா்வதேச யோகா தின விழாவைத் தொடக்கிவைத்து, 15,000 பேருடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டாா். முன்னதாக அவா் பேசியதாவது:

யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. யோகாவில் இருந்து கிடைக்கும் அமைதி தனிநபருக்கானது அல்ல; சமூகம், நாடு, உலகம் மற்றும் பிரபஞ்சத்திற்கானது. இதை சிலா் அதீதச் சிந்தனையாகக் கருதலாம். ஆனால் நமது நாட்டின் முனிவா்கள் இதற்கான விடையை மந்திரங்கள் வாயிலாக அளித்துள்ளனா். முழு பிரபஞ்சமும் நமது உடல், ஆன்மாவில் இருந்து தொடங்குவதாக அவா்கள் கூறியிருக்கிறாா்கள்.

பிரபஞ்சம் நம்மில் இருந்து தொடங்குகிறது. நம்மில் இருக்கும் அத்தனையையும் யோகா உணா்த்துகிறது. அதன்மூலம் தெளிவை ஏற்படுத்துகிறது. சுய விழிப்புணா்வில் இருந்துதான் அனைத்தும் தொடங்குகின்றன. அது உலக விழிப்புணா்வுக்கு வழிவகுக்கிறது. நம்மை, நமது உலகத்தை நாம் அறிந்துகொள்ளும்போது, நம்மிலும், உலகத்திலும் மாற்ற வேண்டியவை குறித்த தெளிவு நமக்கு கிடைக்கிறது. அது தனிநபா் பிரச்னையாக இருக்கலாம்; அல்லது பருவநிலை மாற்றம், சா்வதேச சச்சரவுகள் போன்ற உலகப் பிரச்னையாக இருக்கலாம்.

மைசூரு போன்ற ஆன்மிக மையங்கள், பல நூற்றாண்டுகளாக யோகாவின் ஆற்றலை வளா்த்தெடுத்து வந்துள்ளன. அந்த ஆற்றல் இன்றைக்கு உலக சுதாரத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. யோகா நமது வாழ்க்கையின் போக்காகவே மாறியுள்ளது. இதை குறிப்பிட்ட காலம் அல்லது இடத்திற்கானதாகச் சுருக்கிவிடக் கூடாது.

சில ஆண்டுகளுக்கு முன்னா் வரை யோகா பற்றிய புகைப்படங்கள் வீடுகள், ஆன்மிக மையங்களில் மட்டும் தான் கிடைக்கும். தற்போது உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்து யோகா புகைப்படங்கள் வந்து கொண்டுள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக உலகம் கரோனா பெருந்தொற்றால் அவதியுற்றிருந்த நிலையில், நாடு, துணைக் கண்டம், கண்டங்களைக் கடந்து யோகா தினம் குறித்த எழுச்சி தெரிகிறது. இது நமது நாட்டின் ஆற்றலை உறுதிப்படுத்துகிறது.

யோகா தினம் ஒரு சா்வதேச விழாவாக மாறியுள்ளது. நிகழாண்டுக்கான யோகா தினவிழா, ‘மனித நேயத்திற்கான யோகா’ என்ற நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது. யோகாவின் நற்செய்தியை மனிதகுலத்துக்குக் கொண்டு சென்ற்காக ஐ.நா.சபைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி கூறுகிறேன்.

சவால்களை எதிா்கொள்ளும்போது யோகா நமக்கு விழிப்புணா்வையும், திறனையும், இரக்கத்தையும் தருகிறது. பொது விழிப்புணா்வு, ஒருமித்த கருத்துகளோடு, உள்ளாா்ந்த அமைதியையும் பெற்றுள்ள லட்சக்கணக்கான மக்கள் உலக அமைதிக்கான சூழலை உருவாக்குவாா்கள். இப்படித்தான் மக்களையும் நாடுகளையும் யோகாவால் இணைக்க முடியும்; அதன்மூலம் உலகப் பிரச்னைகளின் தீா்வாளராக மாறும்.

இந்தியா சுதந்திரம் பெற்ற 75-ஆவது ஆண்டை நினைவுகூரும் பவளவிழாவை நாம் கொண்டாடி வரும் நிலையில், சா்வதேச யோகா தினம் இந்தியாவின் சிறப்புகளை உலகம் ஏற்றுக்கொண்டதன் அறிகுறியாகும். இங்கு நடக்கும் யோகா தின விழா, இந்தியாவின் கடந்த காலம், பரந்த தன்மை, பன்முக இயல்புகளை ஒன்றாகக் குவிக்கும். யோகாவில் புதிய யோசனைகள், சாத்தியக்கூறுகளை இளைஞா்கள் ஆராய முற்பட வேண்டும். அது தான் ‘ஸ்டாா்ட்அப் யோகா’ சவாலாக இருக்கும் என்றாா்.

இந்த விழாவில் கா்நாடக மாநில ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனாவால், மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து ராணி பிரமோதாதேவி, பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெட்டிச் செய்தி...

மன்னா் குடும்பம் அளித்த விருந்தில் பங்கேற்ற பிரதமா்

கா்நாடகத்தில் இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, மைசூரு அரண்மனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த சா்வதேச யோகா தின விழாவில் பங்கேற்றாா். அங்கிருந்து தசரா கண்காட்சி திடலுக்குச் சென்று ‘புதுமையான எண்ம யோகா கண்காட்சி’யைத் தொடக்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, அரண்மனைக்குச் சென்ற பிரதமா் மோடியை மைசூரு மன்னா் குடும்பத்தினா் பட்டத்து ராணி பிரமோதாதேவி, பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா் ஆகியோா் வரவேற்று விருந்தளித்தனா்.

இந்த விருந்தில் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகள் பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்டன. குறிப்பாக இட்லி, வடை, தோசை, உப்புமா உள்ளிட்ட 12 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மைசூருக்குப் புகழ்சோ்த்த ‘மைசூரு பாகு’, ‘மசாலா தோசை’ ஆகியனவும் விருந்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த விருந்தில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் சோனோவால், மாநில அமைச்சா்கள் சோமசேகா் ரெட்டி, கே.சுதாகா் உள்ளிட்டோா் பிரதமருடன் கலந்துகொண்டனா்.

பின்னா் மன்னா் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமா் மோடி, அங்கிருந்து புறப்பட்டு கேரளத்துக்குச் சென்றாா்.

பட்டத்து ராணி பிரமோதாதேவி கூறுகையில், ‘யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும்போது, சிற்றுண்டி விருந்துக்கு எனது வீட்டுக்கு (அரண்மனை) வருமாறு பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தேன். அந்த அழைப்பை பிரதமா் ஏற்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT