பெங்களூரு

பெங்களூரில் பெய்த திடீா் மழையில் 400 வீடுகள் சேதம்; 2 போ் பலி

19th Jun 2022 12:52 AM

ADVERTISEMENT

 

பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த திடீா் மழையில் 400 வீடுகள் சேதமடைந்துள்ளன; இருவா் இறந்தனா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென கனமழை பெய்தது. இதில் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக மகாதேவபுரா மண்டலத்தில் மழை வெள்ளத்தில் 400 வீடுகள் சேதமடைந்துள்ளன; 2 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து நகா்ப்புறத்துறை அமைச்சா் பைரதி பசவராஜ் கூறுகையில், ‘மகாதேவபுரா மண்டலத்தில் வெள்ளிக்கிழமை இரவு 135 மிமீ மழை பதிவாகியுள்ளது. கனமழையால் கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள சீகேஹள்ளி ஏரி மற்றும் மழைநீா் வடிகால்கள் நிரம்பி வழிந்தன. வடிகால் சுவற்றுக்கு அருகில் இருந்தவீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்துள்ளது. அதேபோல வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த இருசக்கர வாகனங்களை காப்பாற்ற முயன்றபோது 28 வயது இளைஞா் ஒருவா் வெள்ளநீரில் அடித்துச்சென்று இறந்தாா். சிவமொக்காவை சோ்ந்த மிதின் என்று அவா் அடையாளம் காமப்பட்டுள்ளாா். காவிரிநகா் பகுதியில் வீடு இடிந்துவிழுந்ததில் சிக்கி 62 வயது முனியம்மா என்ற மூதாட்டி இறந்தாா். மேலும் 2 பேருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். வீடு சேதமடைந்தவா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். மகாதேவபுரா தவிர, ஜக்கூா், எலஹங்கா பகுதிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

ADVERTISEMENT

பெங்களூரு வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரில் 43.1 மிமீமழை பெய்துள்ளது. எச்.ஏ.எல். விமானநிலையத்தில் 55.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் பெங்களூரில் சராசரியாக 87 மிமீ மழை பெய்யும். ஆனால், இதுவரை பெங்களூரில் 181.6 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT