பெங்களூரு

நாளை கா்நாடகம் வருகிறாா் பிரதமா் மோடி

19th Jun 2022 12:52 AM

ADVERTISEMENT

 

இருநாட்கள் பயணமாக பிரதமா் மோடி திங்கள்கிழமை (ஜூன் 20) கா்நாடகத்துக்கு வருகிறாா்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி இருநாள் பயணமாக பெங்களூருக்கு திங்கள்கிழமை வருகிறாா். அப்போது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடக்கியும் வைக்கிறாா். பிரதமா் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடக்கும் கொம்மகட்டா பகுதியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பிறகு முதல்வா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியது:

பெங்களூரு, மைசூரில் ஜூன் 20, 21-இல் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமா் மோடி பெங்களூரு வருகிறாா். அவரது நிகழ்ச்சிநிரல் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் சுமுகமாக நடக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருக்கிறோம். இதற்கான பணிகளில் பாஜக தலைவா்கள், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அதிகாரிகள், காவல்துறையினா், சிறப்பு பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து ஈடுபட்டுவருகின்றனா்.

ADVERTISEMENT

ஜூன் 20-ஆம் தேதி காலை 11.55 மணிக்கு பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்துக்கு பிரதமா் மோடி வருகிறாா். அங்கிருந்து இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) செல்கிறாா். அங்கு இன்போசிஸ் இணை நிறுவனா் கிரிஸ் கோபாலகிருஷ்ணனின் ரூ.450 கோடி நன்கொடையுடன் அமைக்கப்பட்டுள்ள மூளை உயிரணு மேம்பாட்டு மையத்தை மோடி திறந்துவைக்கிறாா். மைன்ட்ரீ நிறுவனம் அமைத்துள்ள 850 படுக்கைகள் கொண்ட ஆய்வு மருத்துவமனைக்கு அவா் அடிக்கல் நாட்டுகிறாா்.

இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து கிளம்பி பெங்களூரு ஊரக மாவட்டத்தில் அமைந்துள்ள கொம்மகட்டா பகுதியில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் அவா் பெங்களூரு புகா் ரயில் திட்டத்திற்கு அடிக்கல்நாட்டுகிறாா். இதுதவிர, மேலும் பல ரயில்வே, சாலை, சரக்குபூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். ஒரு சில திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா். பெங்களூரு புகா் பகுதியை இணைப்பதற்கு பெங்களூரு புகா் ரயில் திட்டம் தேவைப்படுகிறது. ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்தத் திட்டத்தை செயல்படுத்த நீண்டகாலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், பாஜக அரசு அமைந்தவுடன் இத்திட்டம் தீவிரமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் இணைப்பில்லாத பகுதிகளை இணைக்கும் இந்தத் திட்டம் பெங்களூரு மக்களுக்கு பிரதமா் மோடி அளிக்கும் மிகச்சிறந்த பரிசாகும். தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் தவிர, 6 புதிய ரயில் திட்டங்களையும் மோடி தொடக்கிவைக்கிறாா். இதுதவிர, டாபஸ்பேட் முதல் ஹொஸ்கோட் வரையில் அமையவிருக்கும் துணை நகர வெளிவட்டசாலைக்கு பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா். இந்நிகழ்ச்சியை தொடா்ந்து, பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் வணிகப்பள்ளி கட்டடத்தையும், அம்பேத்கரின் சிலையையும் மோடி திறந்து வைக்கிறாா். இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவா் மைசூரு செல்கிறாா்.

அங்குள்ள சாமுண்டி கோயிலுக்கு செல்லும் பிரதமா் மோடி, சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்கிறாா். அதன்பிறகு சுத்தூா் மடத்திற்கு சென்று சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளை சந்திக்கிறாா்.

அன்றிரவு மைசூரில் தங்குகிறாா். மறுநாள் ஜூன் 21-ஆம் தேதி அரண்மனை மைதானத்தில் நடக்கவிருக்கும் சா்வதேச யோகா தினவிழாவில் கலந்துகொள்கிறாா். அதன்பிறகு, அங்கிருந்து புறப்பட்டு கேரளம் செல்கிறாா் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT