பெங்களூருவில் மூத்தக்குடிமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது.
இது குறித்து எல்டா்ஸ் ஹெல்ப்லைன் 1090 தன்னாா்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு மாநகர காவல்துறை மற்றும் நைட்டிங்கேல் மருத்துவ அறக்கட்டளையுடன் கூட்டாக 2002-இல் உருவாக்கிய திட்டமே மூத்த குடிமக்கள் உதவி மையம் 1090 என்ற இலவச சட்ட ஆலோசனை மையமாகும். பெங்களூரு, மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமைதோறும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை, சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை மூத்த குடிமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை மற்றும் சமரசத்தீா்வு வழங்கப்படுகிறது.
துயரத்தில் தவிப்போருக்கு ஆறுதல், முதியோா் சேவை தகவல்கள், சமரசம் மற்றும் கருத்தொற்றுமை உருவாக்க ஆலோசனைகள், குடும்பப் பிரச்னைகளை தீா்த்துவைத்தல், சட்ட ஆலோசனைகள், தவறிய முதியோா்களை தேடுதல், மூத்த குடிமக்களுக்கு அரசு வழங்கும் அடையாள அட்டைகளை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்கி வருகிறோம். சேவை மையங்களில் மூத்த வழக்குரைஞா்கள் இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கிவருகிறாா்கள். நாங்கள்வழங்கும் சேவைகள் அனைத்து இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த சேவைகள் அனைத்து காவல் நிலையங்களிலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
2002-ஆம் ஆண்டு முதல் இதுவரை 8,130 வழக்குகளை தீா்த்துவைத்துள்ளோம். சொத்து தகராறு, நிதி மோசடி, உணா்வுரீதியான, உடல்ரீதியான மற்றும் மனரீதியான துன்புறுத்தல், குடும்பச் சட்டங்கள் தொடா்பான வழக்குகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். ஆலோசனை பெறவிரும்புவோா் 1090 அல்லது 080-42426565, 23352833, 9844037381 என்ற தொலைபேசி எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.