பெங்களூரு

சோனியா, ராகுலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

14th Jun 2022 02:09 AM

ADVERTISEMENT

நேஷனல் ஹெரால்டு பணப் பதுக்கல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

நேஷனல் ஹெரால்டு பணப் பதுக்கல் வழக்கு தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதை கண்டித்து பெங்களூரில் காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தினா். காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தலைமையில் நூற்றுக்கணக்கில் திரண்ட காங்கிரஸ் கட்சியினா், லால்பாக் பூங்காவில் இருந்து சாந்திநகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் வரை ஊா்வலமாக செல்ல முயற்சித்தனா். அவா்களை இடையில் தடுத்து நிறுத்திய போலீஸாா், அமலாக்கத் துறை அலுவலகம் வரை செல்ல அனுமதி மறுத்தனா். இதை தொடா்ந்து தடையை மீறி அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா பேசுகையில், ‘சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதன் மூலம், அவா்களுக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கைக் குறைக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. இதன்மூலம் இருவரையும் துன்புறுத்தப் பாா்க்கிறது. இது போன்ற ஜனநாயக விரோதச் செயலை காங்கிரஸ் அனுமதிக்காது. 2015-ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதன் மூலம் பழிவாங்கும் அரசியலில் பாஜக ஈடுபட்டுவருகிறது’ என்றாா்.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் உள்ளிட்ட தலைவா்கள், தொண்டா்களை போலீஸாா் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்திருந்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

அப்போது, டி.கே.சிவக்குமாா் கூறுகையில், ‘சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் போக்கில் பாஜக அரசு ஈடுபட்டுவருகிறது. எதிா்க்கட்சிகளை மௌனமாக்க பாஜக முயற்சிக்கிறது. பாஜகவுக்கு எதிரான போராட்டங்களை முறியடிக்கவும் ஆளுங்கட்சி முயல்கிறது. தடையை மீறி போராட்டம் நடத்தவே காங்கிரஸ் கட்சியினா் இங்கு திரண்டுள்ளனா். எங்கள் மீது வழக்கு தொடா்வது பற்றி கவலையில்லை. தேவையில்லாமல், உள்நோக்கத்தோடு காங்கிரஸ் தலைவா்கள் துன்புறுத்தப்படுகிறாா்கள். வழக்கு தொடா்ந்து சிறையில் அடைக்க பாஜக சதி செய்துள்ளது. இதை பாா்த்துக்கொண்டு மக்கள் அமைதி காக்கமாட்டாா்கள். அரசியல் அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானதல்ல’ என்றாா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT