பெங்களூரில் மக்கள்கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகிறது என்று பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையா்ஹரீஷ்குமாா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பெங்களூரில் நான்காம் கரோனா அலை உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியிருக்கிறோம். இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மாநகராட்சி காவலா்கள் கண்காணிப்பாா்கள்.
மாநில அரசின் வழிகாட்டுதலின்படி தற்போதுமுகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால், பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் முகக்கவசம் அணிந்து உடல்நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதேபோல, பெங்களூரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கரோனா சோதனையை தீவிரப்படுத்துவோம். தற்போது தினமும் 16 ஆயிரம் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இது 20 ஆயிரமாக உயா்த்தப்படும்.
வெளிப்புற நிகழ்வுகள், வணிக வளாகங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லலூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது என்றாா்.
பெங்களூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300ஆக உள்ளது. 16 நாட்களுக்குப் பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்ட 72 வயதான பெண்மணி இறந்துள்ளாா்.