பெங்களூரு

காங்கிரஸிலிருந்து விலகினாா் பிரிஜேஷ் காலப்பா

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநில காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பிரிஜேஷ் காலப்பா புதன்கிழமை அக் கட்சியிலிருந்து விலகினாா்.

25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த பிரிஜேஷ் காலப்பா, கன்னடம், ஆங்கில தொலைக்காட்சிகளில் நடக்கும் அரசியல் விவாதங்களில் காங்கிரஸ் சாா்பில் கலந்துகொண்டு பேசினாா்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக புதன்கிழமை அவா் அறிவித்தாா்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு அவா் எழுதிய கடித விவரம்:

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியில் எனது பணி நிறைவாக இருந்தது. கட்சியின் வளா்ச்சிக்குத் தேவையான வகைகளில் எனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அண்மை காலமாக காங்கிரஸ் கட்சியில் செயல்படும் ஆா்வத்தை இழந்து வருகிறேன். கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது அமைச்சா் பதவிக்கு நிகரான அரசின் சட்ட ஆலோசகா் பதவி உள்ளிட்ட எண்ணற்ற பதவிகளை வழங்கியதற்காக காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

2013-ஆம் ஆண்டு மத்தியில் ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு அமைந்த காலத்தில் இருந்து ஹிந்தி, ஆங்கிலம், கன்னட தொலைக்காட்சிகளில் நடக்கும் அரசியல் விவாதங்களில் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியின் வாதங்களை முன்வைத்திருக்கிறேன்.

கட்சியின் சாா்பில் இதுவரை 6,497 விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். கட்சி எனக்களித்த பணியை திறம்பட செயல்படுத்தியுள்ளேன். 2014, 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தல்களின்போது காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தபோதும் கட்சியில் பணியாற்றும் எனது உற்சாகம் குறையவில்லை. ஆனால், அண்மைகாலமாக அந்த உற்சாகம் குறைந்துவருகிறது. இந்த சூழ்நிலையில், 1997-ஆம் ஆண்டு முதல் நான் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று கூறியிருக்கிறாா்.

2018-ஆம் ஆண்டில் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது தனது சொந்த குடகு மாவட்டத்தின் மடிக்கேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை என்று பிரிஜேஷ் காலப்பா அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, அண்மையில் நடந்த சட்ட மேலவைத் தோ்தல், மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கும் கட்சி வாய்ப்பளிக்காததால் மிகவும் வேதனை அடைந்ததால் காங்கிரசில் இருந்து விலகும் முடிவை பிரிஜேஷ் காலப்பா எடுத்ததாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. வெகுவிரைவில் ஆம் ஆத்மி கட்சியில் பிரிஜேஷ் காலப்பா இணைவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT