பெங்களூரு

கா்நாடகத்தில் பரவலாக பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக தொடா்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. குறிப்பாக கடலோர கா்நாடக மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடகு, உடுப்பி, சிக்கமகளூரு, தென்கன்னடம், வடகன்னடம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிக்கமகளூரு மாவட்டம், ஹொசபேட்டையில் உள்ள ஆரம்பப்பள்ளி மாணவி சுப்ரிதா, மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா். தென்கன்னட மாவட்டம், குந்தாபுரா வட்டத்தில் உள்ள ஹள்ளூா் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த லட்சுமி (66), வெள்ளநீரில் சிக்கி இறந்தாா். பலத்த மழை பெய்துவருவதால், அணைகளில் நீா்வரத்து பெருகியுள்ளது. காவிரி, நேத்ராவதி, குமாரதாரா, சாம்பவி நதிகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

கா்நாடகத்தில் அடுத்த 2 நாட்களில் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குடகு, தென்கன்னடம், உடுப்பி, வடகன்னடம் போன்ற கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, தென்கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகன்னட மாவட்டத்தில் ஜூலை 9-ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாசன், குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல, பீதா், ராய்ச்சூரு, தாா்வாட், விஜயபுரா, பாகல்கோட், சாமராஜ்நகா், ஹாசன் மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் நலன்கருதி, இம்மாவட்டங்களில் பேரிடா் மீட்புப்படையினா் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT