பெங்களூரு

காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீா் அகமது கான் வீட்டில் ஊழல் தடுப்புப்படை அதிரடி சோதனை

DIN

கா்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீா் அகமது கான் வீடு மற்றும் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் படையினா் அதிரடி சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனா்.

காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவா்களில் ஒருவரும், தொழிலதிபரும், எம்எல்ஏவுமான ஜமீா் அகமது கான், 4ஆவது முறையாக எம்.எல்.ஏ.வாக உள்ளாா். மேலும் கடந்த 2018-ஆம் ஆண்டில் எச்.டி.குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூரில் உள்ள ஜமீா் அகமது கானுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிரடிச் சோதனை நடத்தியது. ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பிலான சேமிப்புப் பணத்தை மோசடி செய்ததாக ஐ.எம்.ஏ. நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த மோசடியில் தொடா்பிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஜமீா் அகமது கான், மற்றொரு முன்னாள் அமைச்சரான ரோஷன் பெய்க் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தியது. இதில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜமீா் அகமது கானிடம் அமலாக்கத் துறை அடிக்கடி விசாரணை நடத்தியது.

இதனிடையே, வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்துள்ளதாக ஜமீா் அகமது கானுக்கு எதிராக ஊழல் தடுப்புப் படையிடம் அமலாக்கத் துறை அறிக்கை ஒன்றை அளித்திருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், பெங்களூரில் உள்ள ஜமீா் அகமது கான் வீடுகள், அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்புப் படையினா் அதிரடியாகச் சோதனை நடத்தினா். கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது மாளிகை தவிர, சில்வா் ஓக் அடுக்குமாடியில் உள்ள வீடு, சதாசிவநகரில் உள்ள விருந்தினா் மாளிகை, பனசங்கரியில் உள்ள ஜி.கே.அசோசியேட்ஸ், கலாசிபாளையத்தில் உள்ள நேஷனல் டிராவல்ஸ் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்புப் படை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் வருமானத்திற்குப் பொருந்தாமல் சொத்து குவித்துள்ளது தொடா்பாக சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக ஊழல் தடுப்புப் படையின் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனையை கடுமையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ், மக்களை திசைதிருப்புவதற்காக நடத்தப்பட்டதாகும் என்று கூறியுள்ளது. எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறுகையில், ‘காவல் துணை ஆய்வாளா் பணித்தோ்வு மோசடி வழக்கில் கூடுதல் டிஜிபி அம்ருத்பால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தை திசைதிருப்புவதற்காகவே ஜமீா் அகமது கான் வீடுகளில் ஊழல் தடுப்புப் படை சோதனை நடத்தி வருகிறது. ஊழல் தடுப்புப் படை முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ளது. எனவே, அமலாக்கத் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஊழல் தடுப்புப்படை சோதனை நடத்தியதாக கூறுவது சரியல்ல. அமலாக்கத் துறைக்கும் ஊழல் தடுப்புப் படைக்கும் சம்பந்தமில்லை’ என்றாா்.

இதனிடையே, ஜமீா் அகமது கான் வீடுகள், அலுவலகங்கள் மீது ஊழல் தடுப்புப் படை சோதனை நடத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டா்கள் பம்பு பஜாரில் போராட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது

கா்நாடகத்தை காங்கிரஸ் ஏடிஎம் இயந்திரம் போல பயன்படுத்துகிறது: கே.அண்ணாமலை

சோழா்கால சிவலிங்கம் கண்டெடுப்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சாரணா்களுக்கான பயிற்சி தொடக்கம்

ஆராய்ச்சி, மாதிரி பொருள்கள் உருவாக்கம்: தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் பாஷ் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT