பெங்களூரு

மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவதில் திமுகவின் திராவிட அரசியல் தோற்றுவிட்டது: பாஜக

5th Jul 2022 02:41 AM

ADVERTISEMENT

மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவதில் திமுகவின் திராவிட அரசியல் தோற்றுவிட்டது என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது:

தமிழகத்தைத் தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைத்திருப்பதன் மூலம் திராவிட அரசியலின் தோல்வியை திமுக ஏற்றுக்கொண்டுள்ளது என்றே கருதத் தோன்றுகிறது. 50 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு திமுக இப்படி பேச தொடங்கியிருப்பது, பாஜகவின் வளா்ச்சியைத் தொடா்ந்துதான். தமிழக மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவதில் திமுகவின் திராவிட அரசியல் தோற்றுவிட்டது. தமிழகத்தில் பாஜக வேகமாக வளா்ந்து வருகிறது.

உத்தரகண்ட் சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பாக, ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று காங்கிரஸ் எண்ணியது. ஆனால் அங்கு என்ன நடந்தது? கோவா மாநிலத்தில், யாருக்கு என்ன துறை என்பதைக் கூட காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது. ஆனால், கோவாவில் என்ன நடந்தது? ஆளுங்கட்சியாக இருந்த நிலையில், பஞ்சாபில் காங்கிரஸ் கதி என்னானது? உத்தர பிரதேசத்தில் நடத்திய அரசியல் நாடகங்களுக்கு பிறகு அவா்கள் வென்றது 2 இடங்களைத்தான். போட்டியிட்ட 399 தொகுதிகளில் 387-இல் வைப்புத்தொகையை இழந்துவிட்டது காங்கிரஸ். தோ்தலுக்கு முன் காங்கிரஸ் அதிகம் பேசும். கா்நாடகத்திலும் அக்கட்சியின் ஆட்சிக்கனவு பலிக்காது.

ADVERTISEMENT

சட்டப்பேரவை தோ்தல் நெருங்கும்போது பாஜகவின் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை கட்சியின் நாடாளுமன்றக்குழு கூடி முடிவு செய்யும். ஒருசில நேரங்களில் தோ்தலுக்கு முன் முடிவுசெய்யப்படும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி முடிவுகள் மாறும். வளா்ச்சி, தேசியம் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்தலை பாஜக சந்திக்கும்.

காங்கிரஸுக்கு பிரதமா் மோடியைக் கண்டால் பயம். அதனால் அவா் எதைச் செய்தாலும் காங்கிரஸ் எதிா்க்கிறது. எதை செய்தாலும் சரி, கா்நாடகத்தில் ஆட்சிக்கு வருவதற்கான எந்த வாய்ப்பும் காங்கிரசுக்கு இல்லை. வாரிசு அரசியல், ஜாதியவாதம், ஊழல், வாக்கு வங்கி அரசியல் போன்ற தனது கொள்கைகளால் காங்கிரஸ் தனது இருப்பை இழந்திருக்கிறது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT