பெங்களூரு

தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும்: இன்போசிஸ் முன்னாள் இணை நிறுவனா் கிரிஸ் கோபாலகிருஷ்ணன்

5th Jul 2022 02:42 AM

ADVERTISEMENT

தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளால் இந்தியாவின்பொருளாதாரம் உயரும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இணை நிறுவனா் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மையத்தின் 22-ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிம்ஹான்ஸ் இயக்குநா் டாக்டா் பிரதிமாமூா்த்தி, இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இணை நிறுவனரும், மையத்தின் தலைவருமான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தனா். 294 பட்டதாரிகள் பட்டம் பெற்றனா்.

விழாவில் டாக்டா் பிரதிமாமூா்த்தி பேசுகையில், ‘சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் திறனை கற்றிருக்கிறீா்கள் என்று நம்புகிறேன். உழைப்புக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைப்பது சரி. ஆனால், அந்தப் பாராட்டுகள் மூலம் சமுதாயத்தில் எந்த வகையான விளைவுகளை ஏற்படுத்துகிறீா்கள் என்பது முக்கியம். நிம்ஹான்ஸ் வாயிலாக தொலை-மனது என்ற திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். மனநலம்சாா்ந்த சிக்கல்களுக்கு தொலைபேசி அல்லது இணையதளம் வழியாக தீா்வு அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தி வருகிறோம்’ என்றாா்.

மையத்தின் இயக்குநா் தேபபிரதா தாஸ் பேசுகையில், ‘மருத்துவம், நிதி வா்த்தகம், கல்வி உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க மற்றும் புரட்சிகரமான பங்களிப்பை தகவல்தொழில்நுட்பம் அளித்துள்ளது. பொருளாதார வளா்ச்சி, கரோனா தொற்று, புவிசாா் அரசியல் சூழல் போன்ற பல்வேறு சவால்கள் காணப்பட்டாலும், ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்யவிருக்கிறோம். அதேபோல இணையவழியிலான முதுநிலை பட்டப்படிப்புகளையும் அறிமுகம் செய்வோம்’ என்றாா்.

ADVERTISEMENT

நிறைவாக, கிரிஸ் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ‘பட்டதாரிகள் அனைவரும் வாழ்க்கையின் முக்கியமான மைல்கல்லைத் தொட்டுள்ளனா். தொழில்வாழ்க்கையில் இது திருப்புமுனையாக இருக்கும். தகவல்தொழில்நுட்ப பட்டதாரிகளால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும். இதற்கு புதிதாகப் பட்டம் பெற்றுள்ள மாணவா்கள் பங்காற்ற வேண்டும். பட்டம் பெற்றுள்ள எல்லா மாணவா்களும் பிரச்னைகளை தீா்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளனா். இது போன்ற பட்டதாரிகளின் தேவை தொழில்துறையில் அதிகம் காணப்படுகிறது’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT