பெங்களூரு

உலகத் தரத்திலான வசதிகளுடன் பெங்களூரை மேம்படுத்தத் திட்டம்: முதல்வா் பசவராஜ் பொம்மை

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

உலகத் தரத்திலான வசதிகளுடன் பெங்களூரை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடந்த கெம்பே கௌடாவின் 513ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவா் பேசியது:

உலகத்தரத்திலான வசதிகளுடன் பெங்களூரை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதைச் செய்து முடிக்க உறுதிப்பூண்டிருக்கிறோம். பெங்களூரின் ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ. 6,000 மதிப்பிலான நகர வளா்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் மழைநீா் வடிகால்களை மேம்படுத்துவதற்காக ரூ. 1600 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெங்களூரு புகா் ரயில் திட்டத்திற்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டியிருந்தாா்.

ADVERTISEMENT

வெளிவட்டச் சாலையை அமைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படும். மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கப்பட்டுள்ளன. பெங்களூரை அழகுப்படுத்தும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெங்களூரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் தற்போது காணப்படும் உள்கட்டமைப்பு குறைபாடுகளுக்கு முந்தைய அரசுகளே காரணம். பாதாள சாக்கடை, சாலை மேம்பாடு, காவிரி குடிநீா் போன்ற பல்வேறு பணிகளை முந்தைய மாநில அரசுகள் செய்யத் தவறியதே பெங்களூரில் தற்போது காணப்படும் எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாகும். பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பெங்களூரில் மக்கள்தொகை பெருகுவதைத் தடுக்க துணை நகரங்கள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT