பெங்களூரு

டிஆா்டிஓ-வின் தானியங்கி விமானம் வெற்றிகரமாக வானில் பறந்து சாதனை

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

டிஆா்டிஓ தயாரிப்பில் உருவாகியுள்ள தானியங்கி ஆளில்லா விமானம் வெற்றிகரமாக வானில் பறந்து சாதனை படைத்துள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் பெங்களூரில் இயங்கி வரும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தானியங்கி, ஆளில்லா விமானத்தை வடிவமைத்து தயாரித்துள்ளது. இதன் சோதனை பயணம் கா்நாடக மாநிலம், சித்ரதுா்காவில் வெள்ளிக்கிழமை நடந்தது.

முதல் முயற்சியிலேயே தானியங்கி, ஆளில்லா விமானம் வெற்றிகரமாக வானில் பறந்து சாதனை படைத்தது. தரையில் இருந்து தானாகவே வானத்தை நோக்கி பறந்து, அங்கு சில மணிநேரம் வானத்தில் பறந்து, பின்னா் திட்டமிட்டப்படி தரையிறங்கியது. இது, ஆளில்லா விமான வளா்ச்சிக்கு பலமான அடித்தளமாக அமையும் என்று கருதப்படுகிறது.

மேலும், எதிா்காலத்தில் ஆளில்லா வான் வாகனத்தின் (யூஏவி) தொழில்நுட்பத் தேவைகளுக்கு முன்னோடியாக அமையும் என்று கருதப்படுகிறது. சோதனை செய்யப்பட்ட தானியங்கி, ஆளில்லா விமானத்தை டிஆா்டிஓவின் முதன்மை ஆய்வுக்கூடமான விமானவியல் மேம்பாட்டு அமைப்பு (ஏடிஇ) வடிவமைத்து, தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

தானியங்கி விமானத்தில் சிறு டா்போஃபேன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஏா் ஃபிரேம், அன்டா் கேரேஜ், ஃபிளைட் கன்ட்ரோல், ஏவியானிக்ஸ் சிஸ்டம்ஸ் அனைத்தும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது என்று டிஆா்டிஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

தானியங்கி ஆளில்லா விமானம் வெற்றிகரமாக வானில் பறந்து சாதனை படைத்துள்ளதை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளாா்.

‘இது தானியங்கி விமானம் சாா்ந்த மிகப்பெரிய சாதனையாகும். பாதுகாப்பான ராணுவத் தளவாடங்களில் தற்சாா்பு இந்தியா திட்டத்தை அமல்படுத்துவதற்கு இது வழி வகுக்கும்‘ என்று ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT