பெங்களூரு

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா் தகராறு சட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்

18th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா் தகராறு சட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பிரதமரின் விரைவு பொருளாதார வளா்ச்சி திட்ட செயலாக்கத்தின் தென்மாநிலங்கள் மாநாடு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தலைமையில் காணொலி வழியே திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்று முதல்வா் பசவராஜ் பொம்மை பேசியதாவது:

கா்நாடகத்தின் நீா்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்துக்குக் காரணம் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா் தகராறு சட்டமாகும். இந்தச் சட்டம், தகராறுகளைத் தீா்ப்பதற்கு பதிலாக சிக்கல்களை அதிகமாக்கிவிடுகிறது. எனவே, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா் தகராறு சட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ADVERTISEMENT

நீா்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது எழும் சிக்கல்களை பல்வேறு கூறுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து தீா்ப்பதைக் காட்டிலும், ஒரே முறையில் தீா்க்க முயல வேண்டும். ஆற்றுப்படுகையின் அதிகபட்சப் பயன்பாட்டின் அடிப்படையில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசியல் காரணங்களை விலக்கிவைத்துவிட்டு ஆறு பாய்ந்தோடும் எல்லா மாநிலங்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தீா்வுகளை வகுக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும்.

நீா்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எழும் சிக்கல்களைத் தீா்ப்பதற்குக் கையாளப்படும் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை மத்திய அரசு மறுசீரமைக்க வேண்டும்.

திட்டங்களைச் செயல்படுத்துவதில் காணப்படும் அடிப்படையான தடைகளைக் களைய முற்பட வேண்டும். குறிப்பாக மத்திய அரசு அளவில் வழங்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல்களை விரைவுபடுத்த வேண்டும். திட்டங்களுக்கான முதலீடுகளைப் பெருக்க, நிதிசாா் விதிகளைத் தளா்த்த வேண்டும். அப்போது தான் உள்கட்டமைப்பு திட்டங்களில் அதிக முதலீடுகள் குவியும்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி விதிகளைக் கடைப்பிடிக்காமல், நாடுமுழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு பொது கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் கொண்டுவரப்பட வேண்டும்.

பெங்களூரு-மைசூரு-ஹைதராபாத் இடையே அதிவிரைவு ரயில் தடம் அமைக்க வேண்டியது அவசியம். 453 கி.மீ. தொலைவுள்ள இத்தடத்தை மேம்படுத்துவதால், இரு மாநிலங்களுக்கும் இடையில் புதிய பொருளாதார நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.

இந்தியாவின் தகவல் மற்றும் உயிரிதொழில்நுட்ப ஏற்றுமதியின் 40 சதவீத பங்களிப்பை பெங்களூரு வழங்குகிறது. எனவே, பெங்களூரில் போக்குவரத்து உள்ளிட்டவற்றின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். எனவே, புகா் ரயில் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து செயல்படுத்த வேண்டும்.

பெல்லாரி, சிவமொக்கா, விஜயபுரா, ஹாசன் நகரங்களில் அமைக்கப்படும் மண்டல விமான நிலையங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். சிக்கமகளூரு, மடிக்கேரி, ஹம்பியில் ஹெலிகாப்டா் நிலையங்கள் அமைக்கப்பட்டால் சுற்றுலா மேம்படும்.

ஹம்பி நகரம் பாரம்பரியச் சிறப்புப் பகுதியாக இருப்பதால், பாதாமி, விஜயபுராவை ஒரு சுற்றுலா வளையமாக மாற்றலாம். அதேபோல, மைசூரு, ஷ்ரவணபெலகோலா, பேளுா் பகுதியை மற்றொரு சுற்றுலா வளையமாக உருவாக்கலாம். இவை அனைத்தும் தேசிய சுற்றுலா வரைபடத்தில் இருக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT