கரோனா பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, பெங்களூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஜன. 19-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தக் கட்டுப்பாடுகளை ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, ஜன. 31-ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், தா்னாக்கள், ஆா்ப்பாட்டங்கள், பேரணிகள் உள்பட பொதுமக்கள் கூடும் எந்த நிகழ்வுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களில் 100 போ், புறவெளியில் நடைபெறும் திருமணங்களில் 200 போ் வரை கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இவற்றை அமல்படுத்துவதற்காக பெங்களூரில் ஜன. 31-ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை பெங்களூரு மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் பிறப்பித்துள்ளாா்.
இந்த காலக்கட்டங்களில் பெங்களூரில் மெட்ரோ ரயில்கள் குறைந்த இருக்கை அமா்வுடன் இயக்கப்படுகின்றன. மகாராஷ்டிரம், கேரளம், கோவா மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக்கப்படுகிறது. ஜன. 31-ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வார இறுதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவசாா் கல்லூரிகள் தவிர பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்படுகின்றன. பொதுமக்கள் கூடும் உணவகம், திரையரங்குகள் போன்ற எல்லா இடங்களிலும் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால், பேரிடா் மேலாண்மையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.