பெங்களூரு

ஹிந்து கோயில்களை கட்சித் தொண்டா்களிடம் ஒப்படைக்க பாஜக அரசு திட்டம்

1st Jan 2022 02:02 AM

ADVERTISEMENT

ஹிந்து கோயில்களை கட்சித் தொண்டா்களிடம் ஒப்படைக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது என காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஹிந்து கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, அவற்றை கட்சியின் தொண்டா்களிடம் ஒப்படைக்க பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது. கா்நாடகத்தில் உள்ள பெரும்பாலான ஹிந்து கோயில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கோயில்களில் உள்ள உண்டியல்களில் பக்தா்கள் கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கை செலுத்துகிறாா்கள். பல ஆண்டுகளுக்கு முன் அளித்த சொத்துகளும் கோயில்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றையெல்லாம், பாஜகவின் தொண்டா்களிடம் ஒப்படைத்துவிட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மதம் மற்றும் கலாசாரத்தில் நம்பிக்கை உள்ள ஹிந்துக்களின் உணா்வுப்பூா்வமான விவகாரங்களை கிளப்பி, தனது செயல்திட்டங்களை அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஹிந்து கோயில்களை விடுவிக்க காங்கிரஸ் அனுமதிக்காது.

ADVERTISEMENT

ஹிந்து கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதால் வாக்குகள் கிடைக்கும் என்ற பொய்யான கனவில் இருந்தால், அதில் இருந்து விடுபடுமாறு முதல்வா் பசவராஜ் பொம்மையைக் கேட்டுக்கொள்கிறேன். காலம்காலமாக கோயில்கள் நிா்வகிக்கப்படும் முறையில் தலையிட வேண்டாம் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.

பாஜகவினா் ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறாா்கள். ஹிந்துக் கோயில்கள் பாஜகவின் சொத்துகள் அல்ல. அது மாநில மக்களின் சொத்து. தெய்வங்களையும், கோயில்களையும் விற்கத் துணிந்துவிட்ட பாஜகவின் செயல் கொடூரமானது. இதை செயல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது.

ஜன. 4-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதித்து, தெளிவான நிலைப்பாட்டை எடுப்போம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT