பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ், கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரையில் சனிக்கிழமை குறிப்பிட்டுள்ளதாவது:
சிறிய அறிகுறிகளுடன் கரோனா பெருந்தொற்றுக்கு நான் பாதிக்கப்பட்டிருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அதேபோல, தகுந்த மருத்துவ சிகிச்சையையும் பெற்று வருகிறேன். என்னோடு தொடா்பில் இருந்தவா்கள் உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு, விரைவாக சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.
கா்நாடகத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனாபாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. கா்நாடகத்தில் கரோனா முதல் அலை, இரண்டாவது அலையின்போது அப்போதைய முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட அமைச்சா்கள், அரசு உயரதிகாரிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். கரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சா் பி.சி.நாகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.