பெங்களூரு

மத வழிகாட்டுதல்களை கல்வி நிறுவனங்களில் இருந்து விலக்கி வைப்போம்:கா்நாடக உயா் நீதிமன்றத்தில் அம்பேத்கா் கருத்தை முன்வைத்தது மாநில அரசு

22nd Feb 2022 12:06 AM

ADVERTISEMENT

மத வழிகாட்டுதல்களை கல்வி நிறுவனங்களில் இருந்து விலக்கி வைப்போம் என்ற அம்பேத்கரின் கருத்தை முன்வைத்து, கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடந்துவரும் ஹிஜாப் வழக்கில் கா்நாடக அரசு வாதிட்டது.

கா்நாடக உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி ஜே.எம்.காஜி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு ஹிஜாப் தொடா்பான வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வகுப்பறைகளில் சீருடைகள் தவிர ஹிஜாப் போன்ற மத அடையாளங்களை அணிந்து வரக் கூடாது என்று மாணவ, மாணவிகளுக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவில் அறிவுறுத்தியிருந்தது.

கடந்த 5 தினங்களாக இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் தேவ்தத் காமத், ரவிவா்மகுமாா் உள்ளிட்டோா் வாதங்களை முன்வைத்தனா். 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடந்த வழக்கு விசாரணையின்போது கா்நாடக அரசின் தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவடகி வாதங்களை முன்வைத்தாா். 7-ஆவது நாளாக திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது அவா் கூறியது:

ஹிஜாப் அணிவது கட்டாய மத வழக்கம் கிடையாது என்பதே மாநில அரசின் நிலைப்பாடு. அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில் பேசிய டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா், ‘மத வழிகாட்டுதல்களை கல்வி நிறுவனங்களில் இருந்து விலக்கி வைப்போம்’ என்று கூறினாா்.

ADVERTISEMENT

முத்தலாக், மத வழக்கம் என்று வாதிட்டபோது அதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஹிஜாப் அணிவது கட்டாய மத வழக்கம் என்பதை நிரூபிக்க மனுதாரா்கள் தரப்பில் எவ்விதத் தரவுகளும் வழங்கப்படவில்லை.

கட்டாய மத வழக்கங்களுக்கு மட்டுமே மத வழக்கங்களை கடைப்பிடிக்க உரிமை அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25-இன் பாதுகாப்புக் கிடைக்கும். இந்த சட்டப்பிரிவில் மதரீதியான சீா்திருத்தம் குறித்து கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம் என்றாா்.

முன்னதாக, விசாரணை தொடங்கியதும் தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி,ஹிஜாப் தொடா்பாக சில விளக்கங்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்தாா். அரசு தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவடகியை நோக்கி, தலைமை நீதிபதி கூறுகையில், ‘ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை எதுவும் விதிக்கவில்லை என்று வாதிட்டீா்கள். மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், மாணவா்கள் சீருடை மட்டும் அணிந்து வர வேண்டும் என்று இருக்கிறது. அப்படியானால், உங்கள் (மாநில அரசு) நிலைப்பாடு என்ன? கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதிக்கலாமா, கூடாதா?‘ என்று கேட்டாா்.

அதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவடகி, ‘சீருடை விவகாரத்தில் மாநில அரசு தலையிடுவதில்லை. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை கல்லூரி வளா்ச்சிக் குழுக்களே முடிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, அடுத்த விசாரணையை பிப். 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT