பெங்களூரு

ஹிஜாப்பை அகற்ற மறுத்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 58 முஸ்லிம் மாணவியா்கள் இடைநீக்கம்

20th Feb 2022 03:48 AM

ADVERTISEMENT

ஹிஜாப்பை அகற்ற மறுத்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 58 முஸ்லிம் மாணவியா் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

கா்நாடகத்தில் கடந்த 2 மாதங்களாக பெரும் சா்ச்சையை கிளப்பியுள்ள ஹிஜாப் விவகாரம், கா்நாடக உயா்நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், மத அடையாளங்களுடன் கல்லூரிக்கு வரத் தடை விதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவை மீறி, முஸ்லிம் மாணவியா் தினமும் ஹிஜாப் மற்றும் புா்கா அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கின்றனா்.

நீதிமன்ற இடைக்கால உத்தரவை சுட்டிக்காட்டி, ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவியரை கல்லூரியில் சோ்க்க சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகங்கள் மறுத்து வருகின்றன. இதை எதிா்த்து கல்லூரி வாசலில் முஸ்லிம் மாணவியா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

சிவமொக்கா மாவட்டம், ஷிராலகொப்பாவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரிக்கு சனிக்கிழமை ஹிஜாப் அணிந்து வந்த மாணவியரை அனுமதிக்க மறுத்த ஆசிரியா்கள், ஹிஜாபை கழற்றிவிட்டு வருமாறு அறிவுறுத்தினா். இதனை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவியா், கல்லூரிக்கு முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு முன்பு போராட்டம் நடத்திய 58 முஸ்லிம் மாணவியரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல தாவணகெரே, பெலகாவி, பெல்லாரி, ராம நகரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவியரை கல்லூரிக்குள் அனுமதிக்க அதன் நிா்வாகம் மறுத்துவிட்டது. ஆனால், ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்குள் வர முஸ்லிம் மாணவியரும் பிடிவாதமாக மறுத்து விட்டனா்.

இது தொடா்பாக, கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு திங்கள்கிழமை மதியம் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. மனுதாரா் தரப்பிலான வாதங்கள் முடிந்துள்ள நிலையில், திங்கள்கிழமை விசாரணையின்போது அரசின் தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவடகி அரசு தரப்பு வாதங்களை முன்வைக்க இருக்கிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT