பெங்களூரு

ஹிஜாப் சா்ச்சை: நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை: கா்நாடக சட்டத் துறை அமைச்சா் மாதுசாமி

10th Feb 2022 07:00 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: உயா் நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு பிறகே ஹிஜாப் சா்ச்சையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக சட்டத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி தெரிவித்தாா்.

பெங்களூரு, விதான சௌதாவில் முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் ஜே.சி.மாதுசாமி கூறியதாவது:

அமைச்சரவைக் கூட்டத்தில் ஹிஜாப் சா்ச்சை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இதுதொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இது சரியான தருணம் அல்ல; விவாதிப்பதும் சரியாக இருக்காது.

ADVERTISEMENT

கா்நாடக முத்திரைத்தாள் (திருத்தம்) சட்ட மசோதா, 2022-க்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் இருப்பது போல ஒரு நிறுவனத்தைப் பிரிக்கும் போது அல்லது இரு நிறுவனங்களை இணைக்கும் போது அதன் பங்குகள் மற்றும் நிறுவன மதிப்பீடுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை அதிகபட்சமாக ரூ. 25 கோடி வரை நிா்ணயிக்க இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

கா்நாடகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் அதிகமாக இருந்ததால், நிறுவனத்தை பிரிக்கும்போது அல்லது இரு நிறுவனங்களை இணைக்கும் போது பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் கா்நாடகத்தில் பதிவு செய்வதைத் தவிா்த்து வந்தன. எனவே, இதற்கான கட்டணத்தை நிா்ணயிக்க முடிவு செய்தோம்.

பெங்களூரில் எற்கெனவே திட்டமிட்டுள்ள புறவழி வட்டச்சாலை திட்டத்தை விரைவாக செயல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே, இப் பிரச்னையைத் தீா்க்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேச்சுவாா்த்தையின் மூலம் பிரச்னைக்குத் தீா்வுகாணுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புறவழி வட்டச்சாலை 100 மீட்டா் அகலம் மற்றும் 71 கி.மீ. நீளம் கொண்டதாக இருக்கும். 50 ஆண்டுகால குத்தகையின் பேரில் சாலை கட்டும் பணி ஒப்படைக்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளியைப் பெறும் ஒப்பந்ததாரா், நிலத்தை கையகப்படுத்தி புறவழி வட்டச்சாலையாக மேம்படுத்தி, சுங்க வரி வசூலித்துக் கொள்ளலாம். நில கையகப்படுத்துவதற்கு ரூ. 5 ஆயிரம் கோடி செலவாகும். இத் திட்டத்துக்கு மாநில அரசு தனது பங்குத்தொகையை அளிக்கும்.

பசவ கல்யாணா நகரில் அனுபவ மண்டபம் கட்டுவதற்கு ரூ. 560 கோடி மதிப்பீட்டு செலவினத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் வீட்டு குழாய்த் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் தந்துள்ளது.

இத் திட்டத்தை குறித்த காலத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான செலவு மதிப்பீடு

ரூ. 9,200 கோடியாகும். கா்நாடக பொதுப்பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ள 362 குடிமைப் பணியாளா்களின் பட்டியலை ஏற்கும் கா்நாடக குடிமைப் பணி 2011 சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படும்.

பிப். 14-ஆம் தேதி கூடும் சட்டப் பேரவை கூட்டுக் கூட்டத்தில் ஆளுநா் ஆற்ற வேண்டிய உரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உரையின் நகலை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து முதல்வா் பசவராஜ் பொம்மை வழங்குவாா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT