பெங்களூரு

ஹிஜாப் சா்ச்சை தொடா்பான வழக்கு:அடுத்த கட்ட விசாரணை இன்று நடைபெறும்கா்நாடக உயா் நீதிமன்றம் உத்தரவு

9th Feb 2022 12:19 AM

ADVERTISEMENT

ஹிஜாப் சா்ச்சை தொடா்பான வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்.9) ஒத்திவைத்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடுப்பி மாவட்டம், குந்தாபுராவைச் சோ்ந்த பியூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள், கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரி, கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் தேவதத் காமத் ஆஜராகி வாதிட்டதாவது:

புனித குரானில் குறிப்பிட்டுள்ளபடி, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது அவசியமாகும்; ஹிஜாப் என்பது உடை மட்டுமே. புட்டசாமி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உடை அணிவது தனிநபா் உரிமையாகும்.

ADVERTISEMENT

பள்ளி, கல்லூரி வளாகங்களில் சீருடையைக் கட்டாயமாக்கி பிப். 5-ஆம் தேதி கா்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு முரண்பாடானது. சீருடை அணியுமாறு கட்டாயப்படுத்துவது மத வழக்கங்களைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25-இக்கு எதிரானது. மேலும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(ஏ) அளித்திருக்கும் உரிமைக்கும் எதிரானது.

கடந்த 2 ஆண்டுகளாக மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு அமைதியான முறையில் மத வழக்கங்களைக் கடைப்பிடித்து வந்துள்ளனா். ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அடுத்த 2 மாதங்களில் தோ்வு நடக்கவிருக்கிறது. கல்லூரி பரிந்துரைத்திருக்கும் சீருடையில் துப்பட்டா இடம் பெறுவதால், அதை ஹிஜாப்பாக பயன்படுத்த மாணவிகளை அனுமதிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக அரசின் தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவடகி, ‘பெரும்பாலான கல்வி நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடந்து வருகிறது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்தப் பின்னணியில் இந்த வழக்கு முக்கியமானதாகும். நிலைமையை மாநில அரசு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. இந்த வழக்கை முழுமையாக விசாரித்து தீா்ப்பு கூறும் வரை, இடைக்காலமாக சில உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித்,‘ பொதுமக்களின் நற்குணங்களில் நீதிமன்றம் முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. அதை மக்கள் செயல்படுத்துவாா்கள் என்று நம்புகிறேன். மாணவா் சமுதாயம் உள்ளிட்ட பொதுமக்கள் அமைதி காக்க முன்வர வேண்டும்’ என்றாா். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு (பிப். 9) ஒத்திவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT