பெங்களூரு

பெங்களூரில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்க திட்டம்

30th Dec 2022 12:04 AM

ADVERTISEMENT

பெங்களூரில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகளை இயக்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

கா்நாடக அரசுக்குச் சொந்தமான பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம், சா்வதேச நகரமாக விளங்கும் பெங்களூரில் 1961ஆம் ஆண்டு முதல் பயணிகள் பேருந்துகளை இயக்கிவருகிறது. 1980களில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. சிவாஜிநகா் முதல் அல்சூா், சிவாஜிநகா் முதல் கே.ஆா்.மாா்க்கெட், சிவாஜிநகா் முதல் ஸ்ரீநகா், மெஜஸ்டிக் முதல் தூபனஹள்ளி, மெஜஸ்டிக் முதல் தொம்ளூா், மெஜஸ்டிக் முதல் ஜெயநகா் 4ஆவது பிளாக் தடங்களில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டுவந்தன.

10 ஆண்டுகளாக இயங்கி வந்த இரட்டை அடுக்கு பேருந்துகள், 1990களின் தொடக்கத்தில் பசவனகுடி அருகில் உள்ள ராமகிருஷ்ணமடத்தின் எதிரில் இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று கவிழ்ந்தது. இதில் குழந்தைகள் உயிரிழக்க நோ்ந்ததால், இரட்டை அடுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்து சேவையை தொடங்க மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக 5 பேருந்து மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளை வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இப்பேருந்துகளை கொள்முதல் செய்ய நகா்ப்புற தரைப்போக்குவரத்துத் துறை நிதியுதவி செய்கிறது.

ADVERTISEMENT

ஒரு பேருந்தின் விலை ரூ.2.2 கோடியாகும். இப்பேருந்தில் ஒரு சமயத்தில் 90 போ் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரட்டை அடுக்கு பேருந்து சேவை 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தொடங்கும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழக தொழில்நுட்ப இயக்குநா் ஏ.வி.சூா்யாசென் கூறுகையில், ‘குறைந்தவிலையில் தரமான மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிட்டு வருகிறோம். இந்த பேருந்துகள் மிகவும் விலை உயா்ந்தது. அதனால், விலையில் கவனம் செலுத்தியுள்ளோம்.

இரட்டை அடுக்கு பேருந்துகளை இயக்குவதற்கு தரைக்கு மேல் 5 மீட்டா் இடைவெளி தேவைப்படுகிறது. பெங்களூரின் பல பகுதிகளில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால்,மெட்ரோ ரயில் மேம்பாலங்கள் இருப்பதால், மகாத்மா காந்தி சாலை போன்ற முக்கியமான சாலைகளில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. பிற நாடுகளை போல, சுற்றுலாத்தலங்கள் இருக்கும் இடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படாது. மாறாக, தற்போதுள்ள பேருந்து தடங்களில் இயக்கப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT