பெங்களூரு

மின் கட்டணத்தை குறைக்க திட்டமிட்டு வருகிறோம்: கா்நாடக அமைச்சா் வி.சுனில்குமாா்

4th Dec 2022 01:45 AM

ADVERTISEMENT

மின் கட்டணத்தைக் குறைக்க திட்டமிட்டு வருவதாக கா்நாடக மின் துறை அமைச்சா் வி.சுனில்குமாா் தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவிருக்கிறது. இதை முன்னிட்டு மின் கட்டணத்தை குறைக்கமாநில அரசு திட்டமிட்டுள்ளது. இரு யூனிட் மின்சாரத்தின் விலையை 70 காசுகளில் இருந்து ரூ.2 வரை குறைக்க கா்நாடக அரசு யோசித்து வருகிறது.

இது குறித்து மின் துறை அமைச்சா் வி.சுனில்குமாா் கூறியது:

வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துவகையான வாடிக்கையாளா்களின் மின் கட்டணத்தை குறைக்க திட்டமிட்டு வருகிறோம். இது குறித்து திட்டம் வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்துவருகிறோம். வெகுவிரைவில் மின் கட்டணத்தை உயா்த்த மின் வழங்கல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அப்போது, வாடிக்கையாளா்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படாதவாறு பாா்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

ADVERTISEMENT

மின்கட்டணத்தை குறைக்குமாறு மின் வழங்கல் நிறுவனங்களுக்கு கூறியுள்ளோம். இந்த மின் கட்டணக் குறைப்பு ஒரு யூனிட் மின்சாரத்தின் மீது 70 பைசாவில் இருந்து ரூ.2 வரை இருக்கும். மின் கட்டணங்களில் மாற்றம் செய்வது தொடா்பான முன்மொழிவை கா்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எல்லா மின் வழங்கல் நிறுவனங்களும் வழங்கும்.

அதனடிப்படையில் மின் கட்டணக் குறைப்பு குறித்து கா்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும். கா்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நடைமுறைகள் முடிவடைய 2 மாதங்கள் ஆகும். எனவே, ஆங்கிலப் புத்தாண்டின்போது கா்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மின்கட்டணக் குறைப்பு குறித்த முன்மொழிவு அனுப்பப்படும்.

மின் கட்டணம் குறைக்கப்பட்டால், அது மின் வழங்கல் நிறுவனங்களின் வருவாயை குறைத்துவிடும். மின் வழங்கல் நிறுவனங்களின் வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநில அரசு திட்டம் வகுத்துவருகிறது. மின் கட்டணம் குறைக்கப்பட்டதும், மின் பயன்பாடு அதிகரிக்கும். அதன்மூலம் வருவாய் இழப்பை ஈடுகட்ட முடியும். தற்போதைக்கு 6 படிநிலைகளில் மின் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. 0 முதல் 25 யூனிட்கள், 26 முதல் 50 யூனிட்கள், 51 முதல் 75 யூனிட்கள் என்று 6 படிநிலைகள் உள்ளன. இந்தக் கட்டண படிநிலைகளை 3 ஆக குறைக்கவிருக்கிறோம்.

அதன் கட்டணங்களை வாடிக்கையாளா்களுக்கு சாதகமாக முடிவு செய்வோம். உயா் அழுத்தமின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளா்களுக்கும் மின் கட்டணக் குறைப்பின் பயனை வழங்க திட்டமிட்டிருக்கிறோம். இதன்படி, ஒரு நாளில் தொடா்ந்து 11 மணி நேரம் மின்சாரம் பயன்படுத்தும் உயா் அழுத்த மின் இணைப்புகளின் கட்டணமும் குறைக்கப்படும். நிகழ் நிதியாண்டில் 3 முறை மின் கட்டண உயா்வை சந்தித்துள்ள மக்களுக்கு மின் கட்டணக் குறைப்பு மூலம் சில சலுகைகளை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT