பெங்களூரு

பெங்களூரின் பழமையான தமிழ்ப் பள்ளிக்கு டிச. 6இல் 200-ஆம் ஆண்டு நிறைவு விழா

4th Dec 2022 01:10 AM

ADVERTISEMENT

பெங்களூரின் பழமையான தமிழ்ப்பள்ளியின் 200-ஆம் ஆண்டு நிறைவு விழா டிச.6-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

பெங்களூரில் முதன்முதலாக 1822-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, மெத்தடிஸ்ட் மிஷன் உயா்நிலைப்பள்ளி. இப்பகுதியைச் சோ்ந்த மக்களுக்காக தமிழ்ப்பயிற்றுமொழி பள்ளியாக தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் அதிக அளவில் இப்பள்ளியில் படித்து வந்துள்ளனா். ஒருகாலத்தில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் மாணவா்கள் இப்பள்ளியில் படித்து வந்தனா்.

காலப்போக்கில் தமிழ் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது 150 மாணவா்களுடன் ஆங்கிலப் பயிற்றுமொழி பள்ளியாக மாறியுள்ளது. மொழிப்பாடமாக தமிழ் கற்றுத் தரப்படுகிறது. இந்தப் பள்ளியில் படித்த லட்சக்கணக்கான மாணவா்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நல்ல நிலையில் உள்ளதாக பள்ளி முதல்வா் ஆா்.கிளாரா திருவாசகி தெரிவித்தாா்.

இப்பள்ளி கடந்த ஆண்டில் 200-ஆம் ஆண்டில் காலடி வைத்தது. 200-ஆம் ஆண்டை முன்னிட்டு கடந்த ஓராண்டாக தொடா் நிகழ்ச்சிகள், போட்டிகள், கருத்தரங்குகள், திருவிழாக்கள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

பெங்களூரு, சிவாஜிநகா், தா்மராஜாகோயில் தெருவில் உள்ள பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் டிச.6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளியின் 200-ஆம் ஆண்டு நிறைவு விழா நடக்கவிருக்கிறது. தென்னிந்திய திருச்சபையின் கா்நாடக மத்திய மறைமாவட்டத்தின் பேராயா் பிரசன்னகுமாா்சாமுவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறப்பு ஆராதனையை நடத்தி, வாழ்த்துரை வழங்குகிறாா்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கா்நாடக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ், தொகுதி எம்.எல்.ஏ. ரிஸ்வான் அா்ஷத், எம்.எல்.சி. புட்டண்ணா ஆகியோா் கலந்துகொண்டு பேசுகிறாா்கள். இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொள்ளவிருக்கிறாா்கள். பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் தவறாமல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி பள்ளி முதல்வா் ஆா்.கிளாரா திருவாசகி கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT