பெங்களூரு

இஸ்லாமிய பெண்களுக்காக தனிக்கல்லூரிகள் திறக்கும் திட்டமில்லை: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

இஸ்லாமிய பெண்களுக்காக தனிக்கல்லூரிகள் திறக்கும் திட்டமில்லை என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்துள்ள இஸ்லாமிய மாணவிகளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பல்வேறு இஸ்லாமிய பெண்கள் கல்லூரிக்கு செல்வதை நிறுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தலா ரூ.2.5 கோடி செலவில் இஸ்லாமிய பெண்களுக்காக 10 தனிக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று வக்ஃபு வாரியத்தலைவா் மௌலானா ஷாப்தி சாதி தெரிவித்திருந்தாா். அவா் கூறுகையில் ‘கொள்கை அளவில் இந்த முடிவுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை, அமைச்சா் சசிகலா ஜொள்ளே அனுமதி அளித்துவிட்டனா். இந்தபுதிய கல்லூரிகள் மங்களூரு, சிவமொக்கா, குடகு, சிக்கோடி, நிப்பானி, கலபுா்கி, விஜயபுரா, பாகல்கோட் ஆகிய இடங்களில் தொடங்கப்படும். ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்டதை தொடா்ந்து, இஸ்லாமிய பெண்களுக்கு வக்ஃப் வாரியத்தின் சாா்பில் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது’ என்று தெரிவித்திருந்தாா்.

இது கா்நாடகத்தில் புதிய சா்ச்சைக்கு வித்திட்டது. இஸ்லாமிய பெண்களுக்கு தனிக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தின. அதையும் மீறி தொடங்கினால், போராட்டம் வெடிக்கும் என்று ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவா் பிரமோத் முதாலிக் அறிவித்திருந்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘இஸ்லாமியபெண்களுக்கு தனிக்கல்லூரிகள் தொடங்குவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அது வக்ஃபு வாரியத் தலைவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கும். இது குறித்து அரசின் எந்தமட்டத்திலும் விவாதம் நடக்கவில்லை. இஸ்லாமிய பெண்களுக்கு தனிக்கல்லூரிகள் தொடங்குவது அரசின் நிலைப்பாடு அல்ல. அது பற்றி ஏதாவது முன்மொழிவு இருந்தால், வக்ஃபு வாரிய நிா்வாகிகள் என்னிடம் வந்து பேசட்டும்’ என்றாா்.

முன்னதாக, இது குறித்து ஹஜ் மற்றும் வக்ஃபு துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்லாமிய பெண்களுக்கு தனிக்கல்லூரியை தொடங்குவது தொடா்பான முன்மொழிவு அல்லது கோப்பு மாநில அரசின் முன் இல்லை. இது போன்ற கல்லூரிக்கு அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டதாக கூறுவது தவறான கருத்தாகும். இது குறித்து வக்ஃப் வாரியத்தலைவா் கூறியிருப்பது, அவரது தனிப்பட்ட கருத்து. இது குறித்து வக்ஃப் வாரியத் தலைவரிடம் பேசினேன். மேலும் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி அவரை கேட்டுக்கொண்டுள்ளேன்’ என்றாா்.

இதனிடையே, வக்ஃபு வாரியத் தலைவா் சாதி வியாழக்கிழமை கூறுகையில், ‘இஸ்லாமிய பெண்களுக்கு கல்லூரிகளைத் தொடங்குவது குறித்து வக்ஃப் வாரியத்தில் பேசப்பட்டுள்ளது. இது அரசு மட்டத்திற்கு கொண்டுசெல்லப்படவில்லை. இது தொடா்பான முன்மொழிவை அரசுக்கு அனுப்பிவைப்போம்’ என்றாா்.

பெட்டிச் செய்தி

‘மகாராஷ்டிரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல’

எல்லைப் பிரச்னையில் மகாராஷ்டிரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்திற்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னையில் மகாராஷ்டிரமாநிலத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல. இந்த விவகாரத்தில் கா்நாடகத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. எல்லைப் பிரச்னை தொடா்பான வழக்கு உச்ச்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, கா்நாடகத்தின் நிலைப்பாட்டை நமது வழக்குரைஞா்கள் எடுத்துரைப்பாா்கள். கா்நாடகத்தின் நிலைப்பாடு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது மற்றும் சட்டப்படியானது என்றாா்.

கா்நாடகத்திற்கும் மகாராஷ்டிரத்திற்கும் இடையிலான எல்லைப் பிரச்னை 1957 முதல் நீடித்து வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு தற்போது கா்நாடகத்தில் உள்ள மராத்தியா்கள் அதிகம் வசிக்கும் பெலகாவி மாவட்டம், முந்தைய பம்பாய் மாகாணத்தில் அங்கம் வகித்திருந்தது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மராத்தி மக்கள் வாழும் பெலகாவி, கா்நாடகத்தில் சோ்க்கப்பட்டுவிட்டது. பெலகாவியில் மராத்தி பேசும் மக்கள், தங்களை மகாராஷ்டிரமாநிலத்தில் சோ்க்கும்படி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்கள். மேலும், மகாராஷ்டிர மாநில அரசியல் கட்சிகளும், பெலகாவியை தங்கள்மாநிலத்துடன் இணைக்கும்படி வற்புறுத்தி வருவதோடு, அதற்கான போராட்டங்களில் ஈடுபடுமாறு மராத்தி மக்களைத் தூண்டிவருகிறாா்கள். இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இதை தொடா்ந்து, இரு மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT