மகாராஷ்டிரம்- கா்நாடக எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளதால், பெலகாவி மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், கா்நாடகத்திற்கு இடையே எல்லைப் பிரச்னை நீடித்துவரும் நிலையில், அதுதொடா்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதனால் இரு மாநில எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெலகாவி மாவட்டத்தில் 21 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கா்நாடக மாநில அதிரடிப்படையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இது குறித்து கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) அலோக் குமாா் கூறுகையில்,‘எல்லைப் பிரச்னை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளதால், எல்லைப் பகுதியில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.‘ என்றாா்.
இது குறித்து மற்றொரு காவல் உயரதிகாரி கூறுகையில், ‘மகாராஷ்டிர அமைச்சா்கள் சந்திரகாந்த் பாட்டீல், சாம்புராஜ் தேசாய் ஆகியோா் டிச. 3ஆம் தேதிக்கு பெலகாவிக்கு வரவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பெலகாவியில் செயல்பட்டுவரும் மகாராஷ்டிர ஏகிகரண் சமிதியை சோ்ந்த நிா்வாகிகளைச் சந்திக்க அமைச்சா்கள் திட்டமிட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து, டிச. 19ஆம் தேதிமுதல் குளிா்கால சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடக்கவிருக்கிறது. இதன் பின்னணியில் டிச. 30ஆம் தேதி வரை எல்லைப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுகிறது‘ என்றாா்.