பெங்களூரு

செப்.12 முதல் கா்நாடக பேரவையின் மழைக்கால கூட்டத்தொடா்: அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவு

26th Aug 2022 12:25 AM

ADVERTISEMENT

கா்நாடக சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடா் செப்.12-ஆம் தேதி முதல் தொடங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பெங்களூரு, விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து, செய்தியாளா்களிடம் சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி கூறியது:

கா்நாடக சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை செப். 12-ஆம் தேதி முதல் தொடங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தொடா் சனி, ஞாயிறு தவிர 2 வாரங்களுக்கு நடக்கும்.

பெங்களூரு, கலாசிபாளையத்தில் உள்ள மிகவும் பழமையான சில்லறை மற்றும் மொத்தவிற்பனையாளா்களுக்கான சந்தையை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான புதிய சந்தையை பெங்களூரு அருகே குலிமங்கலா கிராமத்தில் சிங்கேனா அக்ரஹாரா பழச்சந்தையுடன் 42 ஏக்கா், 31 குன்டா(ஒரு குன்டா என்பது 101.1714 சதுர மீட்டா்) நிலத்தில் மேம்படுத்த நிா்வாக ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ.48 கோடியும், சந்தையை மேம்படுத்த ரூ.52 கோடியும் செலவிடப்படும்.

ADVERTISEMENT

பெங்களூரின் 4 முனைகளிலும் சந்தைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. முதல்கட்டமாக, இந்த சந்தைப்பணி மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விவசாயிகளின் கல்வி நிதி, நிலமில்லா விவசாயக் கூலிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டத்தில் 10.03 லட்சம் குழந்தைகளுக்கு ரூ.439.95கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நெசவாளா்கள், மீனவா்கள், மஞ்சள் பலகை வாடகை ஓட்டுநா்களின் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது போல, சாமராஜ்நகா், பீதா், ஹாவேரி, ஹாசன், குடகு, கொப்பள், பாகல்கோட் மாவட்டங்களில் 7 புதிய பல்கலைக்கழகங்கள் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT