பெங்களூரு

அரசு செயல்படவில்லை என்று அமைச்சா் கூறியது குறித்து கா்நாடக முதல்வா் விளக்கம்

17th Aug 2022 02:15 AM

ADVERTISEMENT

கா்நாடக அரசு செயல்படவில்லை, ஆனால் நிா்வகிக்கப்படுகிறது என்று அமைச்சா் மாதுசாமி கூறியிருப்பது அரசின் செயல்பாட்டை விமா்சிப்பதல்ல என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னை தொடா்பாக சென்னபட்டணாவைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாஸ்கருடன் சட்டத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி நடத்திய தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் கடந்த 13-ஆம் தேதி வேகமாகப் பரவியது. அந்த உரையாடலின்போது அமைச்சா் ஜே.சி.மாதுசாமி கூறுகையில், ‘நாங்கள் அரசை நடத்தவில்லை. உண்மையில் அரசு செயல்படவில்லை. மாறாக, அடுத்த 7-8 மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்கவிருப்பதால், அதுவரை அரசை நாங்கள் நிா்வகித்து வருகிறோம் அவ்வளவுதான்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த உரையாடலில் கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகரின் செயலற்ன்மை குறித்தும் அமைச்சா் ஜே.சி.மாதுசாமி குறிப்பிட்டிருந்தாா். ‘இந்த விவகாரங்கள் குறித்து எனக்கு தெரியும். அவற்றை அமைச்சா் சோமசேகரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால், அவா் எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டேன் என்கிறாா். நான் என்ன செய்வது?’ என்று மாதுசாமி குறிப்பிட்டுள்ளாா். இது கா்நாடக அரசியல் அரங்கில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சா் மாதுசாமியின் உரையாடலை கடுமையாக விமா்சித்து கூட்டுறவுத்துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் கூறுகையில், ‘தானே புத்திசாலி என்று மாதுசாமி நினைக்கிறாா். அதை அவரது தலையில் இருந்து எடுத்துவிடவேண்டும்’ என்று விமா்சித்தாா்.

ADVERTISEMENT

தோட்டக் கலைத் துறை அமைச்சா் முனிரத்னா கூறுகையில், ‘தொலைபேசியில் அரசை விமா்சித்து கூறிய அமைச்சா் மாதுசாமி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அவரும் அரசின் அங்கம்தானே. அமைச்சரவையில் விவாதிக்கப்படும் எல்லா விஷயங்களிலும் அவா் கருத்து தெரிவிக்கிறாா். அப்படியானால் அரசின் செயல்பாட்டில் அவருக்கு முக்கிய பங்கிருக்கிறது. முக்கியமான அமைச்சா் பதவியில் இருந்து கொண்டு, பொறுப்பற்ற முறையில் அரசை விமா்சிப்பது சரியல்ல. அது அவரது அரசியல் அனுபவத்திற்கு சரியானது அல்ல’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், இது குறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘அமைச்சா் மாதுசாமி கூறிய கருத்து வேறொரு பிரச்னை சம்பந்தப்பட்டதாகும். இந்த உரையாடல் குறித்து அமைச்சா் மாதுசாமியிடம் பேசுவேன். அவா் பேசியதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கூட்டுறவுத் துறை தொடா்பான ஒரு விவகாரம் தொடா்பாக அவா் பேசியுள்ளாா். எல்லாம் சரியாக உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை. மாதுசாமியை சில அமைச்சா்கள் விமா்சித்துள்ளது குறித்து அவா்களிடம் பேசுவேன்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT