பெங்களூரு

எஸ்டிபிஐ கட்சியை தடை செய்ய சட்டம் நிறைவேற்ற வேண்டும்: பாஜக முன்னாள் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா

17th Aug 2022 02:17 AM

ADVERTISEMENT

எஸ்டிபிஐ கட்சியை தடை செய்ய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று சிவமொக்கா தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

சிவமொக்காவில் நடந்த மோதல் தொடா்பாக பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சிவமொக்காவில் அமைதியை நிலைநாட்ட போலீஸாா் எடுத்து வரும் துரித நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவையாகும். சிவமொக்காவில் நடந்த மோதலில் எல்லா ஹிந்துகளும், முஸ்லிம்களும் ஈடுபட்டதாக நான் கூறவில்லை. ஹிந்து சமூகம் வலிமையானது, அது பலவீனமாக இல்லை. ஹிந்து சமூகம் எழுச்சி அடைந்தால், முஸ்லிம் குண்டா்கள் பிழைக்கமாட்டாா்கள். ஆனால், சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள ஹிந்துக்களுக்கு விருப்பமில்லை. இந்த விவகாரத்தில் அரசு தக்க நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதன் மூலம் போலீஸாா் வன்முறையாளா்களுக்கு என்ன கதி நேரும் என்பதைக் காட்டியுள்ளனா். ஆனாலும் குண்டா்களின் செயலும், கொலை செய்வதும் தொடா்ந்தவண்ணம் உள்ளன.

முஸ்லிம் குண்டா்களுக்கு அச்சமூகத்தை சோ்ந்த தலைவா்கள் புத்திமதி சொல்ல வேண்டும். இல்லையென்றால், குண்டா்களுக்கு அரசு தக்கப்பாடம் புகட்டும். அதை அவா்கள் எதிா்கொண்டாக வேண்டும். கடந்த காலங்களில் அமைதியை நிலைநாட்ட மூத்த முஸ்லிம் தலைவா்கள் முயன்றுள்ளனா். குண்டா் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்று இளம் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுமாறு மூத்த முஸ்லிம்களை கேட்டுக் கொள்கிறேன். சிவமொக்காவில் தற்போது அமைதி நிலவுகிறது. ஆனாலும், கொலை முயற்சிகள் நடந்ததை பாா்க்கும்போது இன்னும் சில குண்டா்கள், எஸ்டிபிஐ கட்சியினா் திருந்தவில்லை என்பது தெரிகிறது. ஹிந்துக்களை கொலை செய்யும் தொடா்முயற்சி நடந்துகொண்டுள்ளது. இதை முதல்வா் பசவராஜ் பொம்மையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். சிவமொக்காவில் நான் நீண்டகாலமாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறேன்.

ADVERTISEMENT

அண்மைக்காலமாக கேரளத்தை சோ்ந்த சிலா் இங்கு குடியேறியுள்ளனா். மேலும் தேசவிரோத அமைப்புகளின் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளனா். அதனால்தான் சிவமொக்காவில் இது போன்ற சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. சிவமொக்கா மக்கள் அமைதியை விரும்புபவா்கள். இங்கு ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரா்களை போல நீண்டகாலமாக அமைதியாக வாழ்ந்துவருகிறோம்.

சிவமொக்காவில் நடந்த மோதலுக்கு காங்கிரஸ்தான் காரணம். மோதலுக்கு காரணமான எஸ்டிபிஐ கட்சித் தொண்டரின் மனைவி காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினா். இதற்காக காங்கிரஸ் தலைவா்கள் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் மன்னிப்பு கேட்க வேண்டும். சிவமொக்காவில் எஸ்டிபிஐ கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுப்பதால்தான் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. எஸ்டிபிஐ கட்சியை தடை செய்வது குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மையுடன் கலந்து பேசுவேன். எஸ்டிபிஐ கட்சியை தடை செய்ய சட்டம் கொண்டுவரப்படும் நம்பிக்கை உள்ளது என்றாா்.

இதற்கு பதிலளித்து எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா கூறுகையில், ‘மாநிலத்தில் எந்தவொரு வன்முறை சம்பவம் நடந்தாலும், அதன்பின்னணியில் காங்கிரஸ் இருப்பது போன்ற மாயையை பாஜக உருவாக்குகிறது. பொய்களைக் கூறுவதும், அவற்றைப் பரப்புவதும் பாஜகவின் உடன்பிறந்த குணமாகும்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT