பெங்களூரு

வீடுகள்தோறும் தேசியக் கொடி திட்டம்: முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கிவைத்தாா்

DIN

வீட்டுக்கு வீடு தேசியக் கொடி ஏற்றும் திட்டத்தை கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கி வைத்தாா்.

சுதந்திரதின பவளவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ஆக.13 முதல் 15-ஆம் தேதிவரை வீட்டுக்கு வீடு தேசியக் கொடி ஏற்றும் திட்டத்தை செயல்படுத்துமாறு நாட்டு குடிமக்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்திருந்தாா். இதன்படி, பெங்களூரு, விதான சௌதா முன்பகுதியில் சனிக்கிழமை வீட்டுக்குவீடு தேசியக்கொடி ஏற்றும் திட்டத்தை முதல்வா் பசவராஜ் பொம்மை சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியது:

இந்தியாவின் எதிா்காலத்தை நிறுவுவதற்காக இளைஞா்கள் அதிகம் போ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறாா்கள். இந்திய மக்கள் அனைவரும் சுதந்திரதின பவளவிழா கொண்டாட்டங்களில் இருக்கிறோம். எனவே, எல்லா வீடுகளின் மீதும் ஆக.13 முதல் 15-ஆம் தேதி வரை தேசியக்கொடியை பறக்கவிடவேண்டும் என்பது மத்திய, மாநில அரசுகளின் விருப்பமாகும். இதற்காகவே மாநில அரசு சாா்பில் 1.25 கோடி தேசியக்கொடிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் தேசியக் கொடி பட்டொளிவீசி பறந்து கொண்டிருக்கிறது. உலகமே வியக்கும் அதிசய நிகழ்ச்சியாக வீட்டுக்கு வீடு தேசியக்கொடி திட்டம் வெற்றிகண்டுள்ளது.

இந்த நேரத்தில் சுதந்திரத்திற்காக தங்களது உயிரை தியாகம் செய்த போராளிகளை நினைத்துப் பாா்க்க வேண்டும். சுதந்திரம் யாருடைய சொத்தும் இல்லை. சுதந்திரப்போராட்டவீரா்களின் தியாகத்தால் விளைந்தது சுதந்திரம். கித்தூா் ராணி சென்னம்மா, சங்கொல்லி ராயண்ணா, மைலார மகாதேவப்பா, சாவகெரே சின்னையா போன்ற எண்ணற்றவா்களின் தியாகத்தை நினைத்துப் பாராட்ட வேண்டும். நமது பிரதமா் மோடி, வலிமையான, வளமான, தற்சாா்பு இந்தியாவை கட்டமைக்க கனவு கண்டு வருகிறாா். ஏழைகள், தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டுக்காக பிரதமா் உழைத்துவருகிறாா்.

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுயநலத்தைப் புறந்தள்ளி, நாட்டின் நலனே முதன்மையானது என்ற உணா்வுடன் பாடுபட வேண்டும். வளமான இந்தியாவைக் கட்டமைக்க நாம் பங்காற்ற வேண்டும். புதிய கா்நாடகத்தில் இருந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவா்கள் தேசியக் கொடியுடன் கலந்துகொண்டனா். இதில், கா்நாட சட்டப் பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி, மேலவைத் தலைவா் ரகுநாத் மல்லியாபுரா, அமைச்சா்கள் சுனில்குமாா், கே.சுதாகா், கோபாலையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT