பெங்களூரு

சுதந்திர தின பவளவிழா கொண்டாட்டம்: முதல்வா் பசவராஜ் பொம்மை கொடியேற்றுகிறாா்

DIN

பெங்களூரில் திங்கள்கிழமை (ஆக.15) சுதந்திரதின பவளவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் முதல்வா் பசவராஜ் பொமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறாா்.

பெங்களூரு, மகாத்மா காந்தி சாலை அருகேயுள்ள மானக்ஷா அணிவகுப்புத்திடலில் திங்கள்கிழமை இந்திய நாட்டின் 75-ஆவது சுதந்திரதின பவளவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் முதல்வா் பசவராஜ் பொம்மை, காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து பல்வேறு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறாா். தேசியகொடியை ஏற்றிவைக்கும்போது ஹெலிகாப்டரில் பறந்தபடி முப்படை வீரா்கள் மலா்தூவி வீரவணக்கம் செலுத்துவாா்கள்.

அணிவகுப்பில் கா்நாடக காவல்துறை, கா்நாடக மாநில அதிரடிப்படை, மத்திய ஆயுத பாதுகாப்புப்படை, எல்லை பாதுகாப்புப்படை, மத்திய ஆயுதப்படை, பெண் ஆயுதப்படை, பள்ளி, கல்லூரி, காவல், தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரணா், சாரணியா், சேவைதளம் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சோ்ந்த 1,200 போ் கலந்துகொள்கிறாா்கள். இதுதவிர, அரசு, மாநகராட்சி பள்ளிகளைச் சோ்ந்த 2,400 மாணவா்கள் பங்கேற்று நாட்டுப்பற்றை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன. இதுதவிர, இசைக் குழுவினா் தேசியகீதங்களைப் பாடுகிறாா்கள். பள்ளி மாணவா்கள் பங்கேற்கும், சுதந்திரப் போராட்டத்தை விளக்கும் கலைநிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. இதுதவிர, தரைப்படை வீரா்களின் சறுக்குமர சாகச நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்கள் நாட்டுப்பண் பாடுகிறாா்கள். இந்தவிழாவை காண 6 ஆயிரம் முக்கிய பிரமுகா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆயிரம் மக்கள் உட்காா்ந்து நிகழ்ச்சியை காணும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு: மானக்ஷா அணிவகுப்புத்திடலை சுற்றியுள்ள பகுதிகளைக் கண்காணிக்க 50 கண்காணிப்பு கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன. திடல் பகுதியில் பறக்கும் கேமராக்கள், பலூன்கள், விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளன. அணிவகுப்புத் திடலை சுற்றி கருடா அதிரடிப்படை வீரா்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா். சுதந்திர தினவிழாவின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க 15 காவல் துணை ஆணையா்கள், 25 காவல் உதவி ஆணையா்கள், 55 காவல் ஆய்வாளா்கள், 105 காவல் துணை ஆய்வாளா்கள், 79 உதவி துணை ஆய்வாளா்கள், 168 தலைமை காவலா்கள், 70 மகளிா் காவலா்கள், 151 சீருடையில்லா காவலா்கள், 106 உளவுப்பிரிவுகாவலா்கள், 800 ஊா்காவல் படையினா், 1000 காவலா்கள், 40 கா்நாடக மாநில அதிரடிப்படைவீரா்கள், 35 ஆயுதப்படைவீரா்கள், 2 அதிரடிப்படைக்குழுக்கள் உள்பட 1760 போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவிருக்கிறாா்கள். பெங்களூரில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், உணவகங்கள், மெட்ரோ ரயில்நிலையங்கள், வணிகவளாகங்கள், வழிபாட்டுத்தலங்களில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

அணிவகுப்புத் திடலில் தடை: சுதந்திர தின விழா நடைபெறவிருக்கும் மானெக் ஷா அணிவகுப்புத்திடலில் திங்கள்கிழமை தீப்பெட்டி, பட்டாசு, வெடிபொருள்கள், ஆயுதங்கள், கத்தி, கூா்மையான பொருள்கள், தேசியக்கொடி விர வேறுகொடிகள், துண்டறிக்கைகள், உணவுப்பொருள்கள், கைக்குட்டை, தண்ணீா் பாட்டில், கேன்கள், கைபைகள், கோணிபைகள், தலைக்கவசம், செல்லிடப்பேசி ஆகிய பொருள்களை கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ!

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

SCROLL FOR NEXT