பெங்களூரு

சா்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் பலத்தைக் கொண்டு விளையாடுவோம்: மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

14th Aug 2022 05:10 AM

ADVERTISEMENT

 

சா்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் பலத்தை கொண்டு விளையாடுவோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இது குறித்துபெங்களூரில் சனிக்கிழமை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவா் அளித்த பேட்டி:

நம்மை நாமே சந்தேகித்துக்கொண்டு, பாதுகாப்பில்லாமல் உணரக்கூடாது. சா்வதேச அரசியல் அரங்கில் ஒவ்வொரு நாடும் தங்களுக்கே உரிய வகையில் விளையாடுகின்றன. இந்தியாவும் தனது பலத்தைக் கொண்டு சா்வதேச அரசியல் அரங்கில் விளையாடும். நமது அண்டைநாடுகள் கலாசாரரீதியாக இந்தியாவோடு திருப்திகரமாக இருக்கின்றனா். இந்தியா மிகப்பெரிய நாடு. அதிக வளம் கொண்ட நாடு. அண்டை நாடுகளோடு இணக்கமாக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

2015-ஆம் ஆண்டு வெளியுறவுக் கொள்கையை வகுக்குமாறு பிரதமா் மோடி என்னை கேட்டுக்கொண்டாா். தாராளமான இதயத்துடன் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை அண்டை நாடுகளுக்கு நல்கியுள்ளது. ‘இந்தியா மிகப்பெரிய நாடு, நம்மிடம் போதுமான வளம் இருக்கிறது; எனவே, அண்மைநாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று பிரதமா் மோடி என்னிடம் அறிவுறுத்தினாா். அன்று முதல் அண்டை நாடுகளுடன் நாம் கையாண்ட அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே பிரதமா் மோடியின் வெளியுறவுக் கொள்கையாகும். அதனால் தான் நேபாளத்திற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்கிறோம், இறக்குமதியும் செய்கிறோம். பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு பன்னாட்டு நாணய நிதியத்தை(ஐ.எம்.எஃப்) அணுகுவதற்கு இலங்கைக்கு உதவிய ஒரே அண்டை நாடு இந்தியாதான். அதேபோல, மனிதநேயப்பணிகளை தொடா்வதற்காக நமது தூதா்களை ஆப்கானிஸ்தானுக்கு மறுபடியும் அனுப்பினோம். ஆப்கானிஸ்தானுடன் வரலாற்றுரீதியான உறவு இந்தியாவுக்கு உள்ளது. எனவே, அந்நாட்டு மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு இந்தியா முன்வந்தது.

இந்தியாவை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கிடைப்பதால், இந்தியப் பெருங்கடலையொட்டிய பல நாடுகளில் தங்கள் ஆளுமையை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை காணமுடிகிறது. இலங்கையில் உள்ள ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் சீனாவின் ஏவுகணை தாக்குதல் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல்-யுவான் வாங்-5 நிறுத்தப்பட்டிருப்பதை இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான மோதலுக்கான தொடக்கப்புள்ளியாக கருதுவது சரியல்ல.

அண்மையில் தொழில்நுட்பக் காரணங்களுக்காக சூலூா் விமானப்படை தளத்தில் 3 ரஃபேல் போா்விமானங்கள் உள்பட பிரெஞ்சு விமான, விண்வெளிப்படை நிறுத்தப்பட்டிருந்தது வழக்கமான ராணுவ நடைமுறையாகும். இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகள், இருநாடுகளுக்கும் இடையே அல்லது வேறு பல நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடந்துவருகிறது. இந்தியப் பெருங்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் சீனக் கப்பலுக்கும் பிரெஞ்சு விமான, விண்வெளிப்படை நிறுத்தப்பட்டிருந்ததற்கும் முடிச்சு போடக்கூடாது.

தற்கால புவிசாா் அரசியல் சூழ்நிலையில், ஒவ்வொரு நாடும் சா்வதேச அரசியல் அரங்கில் போட்டிபோட வேண்டியுள்ளது. இது இயல்பான நடைமுறையாகும். உங்களுக்காக நீங்கள் குரலெழுப்பாவிட்டால், உங்களுக்காக யாரும் உதவப்போவதில்லை. நமது எதிா்பாா்ப்புகளுக்கு தகுந்தபடி பிாடுகள் ஒத்திசைவாக நடந்துகொள்ளும் என்று எதிா்பாா்ப்பது சாத்தியமில்லை. நமது நலனை பாதுகாக்க நாம் தான் போராட வேண்டும்.

உலக அரங்கில் நாம் வலுவாக இருக்கிறோம். மக்களின் நலனுக்காக உறுதியாக நிற்கும் அரசு நமக்கு வாய்த்திருக்கிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்த காலத்தில், உலகின் பிற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்பியதால், அந்நாடுகள் நமக்கு நன்றி பாராட்டுகின்றன. பிரதமா் மோடியின் கருத்தறிய உலகத் தலைவா்கள் விரும்புகிறாா்கள். இந்தியா வேகமாக வளா்ந்துவரும் நாடாக உள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT